நமது பிராந்தியத்தில் அன்மைக்காலமாக எதிர்நோக்கி வரும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலமைகள் குறித்து ஆராய்வதற்காக நேற்று(29) நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி அப்துல் லதீப் அவர்களின் ஏற்பாட்டில் கலந்துரையாடல் கூட்டமொன்று நடைபெற்றது.இந்நிகழ்வில் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர்களான அஷ்ரப் தாஹிர், ஏ. ஆதம்பாவா, எம்.எஸ். உதுமா லெவ்வை மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பனிப்பாளர் றியாஸ், பிரதேச சபை செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.இதன் போது நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்ட அனர்த்தங்கள் குறித்து கிராம சேவையாளர்களிடம் கேட்டறியப்பட்டிருந்தது. வெள்ள நீர் வழிந்தோடாமைக்கான காரணமாக, குடியிருப்பு கானிகளை விடவும் வீதிகள் உயரமாக அமைக்கப்பட்டிருப்பது அடையாளப்படுத்தப்பட்டது.அதே போல வடிகான் துப்பரவு பணிகள் முழுமையடையாமையும் நீர் வழிந்தோடாமைக்கான காரணங்களுள் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. இனிவரும் காலங்களில் அனர்த்தத்தின் போதான முன்னாயத்த திட்டங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டிருந்தது.விவசாயிகளின் வயல்கானி அழிவுகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதார பாதிப்புக்கள் குறித்தும் அவற்றுக்கான நஷ்ட ஈடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தது.இதன் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர், நாட்டின் பொருளாதார மேம்பாடுகளை பொறுத்தே இவ் அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் அமையும். கடந்த கால ஆட்சியாளர்கள் மீது மக்கள் கொண்ட வெறுப்பின் காரணமாக மாற்றம் வேண்டியே இவ் அரசாங்கத்திற்கு அதிகமான வாக்குகளை மக்கள் வழங்கியிருக்கின்றார்கள்.
மேலும் இந்த ஆட்சியில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் செயற்படுவதை அறிய முடிகின்றது. அதே போல அரச அதிகாரிகளும் அரசாங்கத்திற்கு ஒத்துளைப்பு வழங்கி சிக்கனமான முறையில் செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஒத்துளைப்பு வழங்கினாலே ஊழலற்ற ஆட்சியினை முன்னெடுக்க முடியுமெனக் கூறியிருந்தார்.இதன்போது தனது வேண்டுகோளையேற்று, நிந்தவூர் பிரதான வீதி ஆலிம் விழுந்த பாலம் வெள்ள நீரினால் பாதிப்புக்குள்ளாகி முற்றாக சேதமடைந்து போக்குவரத்து தடைப்பட்டிருந்ததையடுத்து விரைவாக செயற்பட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலமை பொறியியலாளர் அலியார் அவர்களுக்கும் தடைப்பட்டிருந்த நிந்தவூர் பிரதேசத்திற்கான குடிநீர் விநியோகம் தற்காலிகமாக ஒலுவில் பிரதேச இணைப்பிலிருந்து விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட அக்கறைப்பற்று பிராந்திய நீர்வழங்கள் அதிகார சபையின் பிராந்திய பொறியியலாளர் ஹைதர் அலி அவர்களுக்கும் விரைவாக செயற்பட்ட ஊழியர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் சபை முன்னிலையில் நன்றிகளை தெரிவித்திருந்தார்.