க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களுடன் ஹட்டன் ஸ்ரீபாத கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு பயணித்த வேன் ஒன்றை வழிமறித்த சம்பவம் ஒன்று நோர்வூட் பகுதியில் பதிவாகியுள்ளது.வேனில் பயணித்த பரீட்சை மண்டப பொறுப்பதிகாரி மற்றும் உப பொறுப்பதிகாரியை நேற்று (18) பிற்பகல் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் திட்டியதாக கூறப்படும் சம்பவம் குறித்து நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.நோர்வூட் பொலிஸ் பிரிவிலுள்ள புளியவத்தை பரீட்சை நிலையத்தில் நேற்று நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த பின்னர், ஸ்ரீபாத கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு விடைத்தாள்களை வழங்குவதற்காக மண்டப பொறுப்பதிகாரி தனது பிரத்தியேக வேனில் பயணித்துக் கொண்டிருந்தபோது, புளியவத்தை பாடசாலைக்குச் செல்லும் பிரதான வாயலை மறித்தவாறு முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
பின்னர் வாகனத்தை வாயிலிலிருந்து அகற்றுமாறு பரீட்சை மண்டப பொறுப்பதிகாரி, முச்சக்கர வண்டி சாரதியிடம் கோரியுள்ளார்.எனினும் முச்சக்கர வண்டி அகற்றப்படாததால், பரீட்சை பொறுப்பதிகாரி வீதியை மறித்து நின்ற முச்சக்கர வண்டியை மோதாமல் தனது வேனை முன்னோக்கி செலுத்த பெரும் முயற்சி எடுத்திருந்தார்.பின்னர் முச்சக்கர வண்டி சாரதி சுமார் 500 மீட்டர் தூரம் வேனைப் பின்தொடர்ந்து சென்று, முச்சக்கர வண்டியை நிறுத்தி, பின்னர் வேனில் இருந்த பொறுப்பதிகாரி மற்றும் துணை பொறுப்பதிகாரியை திட்டியுள்ளதாக நோர்வூட் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பாக நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் செய்தி பிரிவு விசாரித்தபோது, சம்பந்தப்பட்ட முச்சக்கர வண்டி சாரதி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் புளியாவத்தை தமிழ்ப் பாடசாலைக்கு அருகில் முச்சக்கர வண்டியை வாடகை அடிப்படையில் செலுத்துபவர் என்றும் தெரியவந்துள்ளது.
பாடசாலை வாயிலை மறிப்பது தொடர்பாக பரீட்சை மண்டப பொறுப்பதிகாரிக்கும், முச்சக்கர வண்டி சாரதிக்கும் இடையே வார்த்தைப் பரிமாற்றம் நடந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த முச்சக்கர வண்டி சாரதி, வேனைப் பின்தொடர்ந்து சென்று வழிமறித்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.