ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப்பெறும் தரப்பினர் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும். பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் வீதம் சடுதியாக அதிகரித்துள்ளமை பாரிய அச்சுறுத்தலாகும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) இடம்பெற்ற அமர்வின் போது போதைப்பொருள் ஒழிப்புக்கான அவதானிப்புக்கள் மற்றும் விதிப்புரைகளை முன்வைப்பதற்கான நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையை சபைக்கு சமர்ப்பித்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக காணப்படும் போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு ஊடாக பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடினோம். இதற்கமைய போதைப்பொருள் ஒழிப்புக்கான அவதானிப்புக்களையும், திட்டங்களையும் முன்வைத்துள்ளோம்.
போதைப்பொருள் ஒழிப்புக்காக செயற்படும் அரச மற்றும் தனியார் துறையினர் எமது செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கினார்கள். தற்போதைய நிலையில் நகர் மற்றும் கிராமப்புறங்களில் ஆண் பெண் என்ற இருபாலாரும் வயது வேறுபாடின்றி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள்.பாடசாலை மாணவர்களில் பெரும்பாலானோர் ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளமை பாரிய அச்சுறுத்தலாகும். பிலிப்பைன்ஸ், எகிப்து உள்ளிட்ட நாடுகள் போதைப்பொருள் பாவனையை முழுமையாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளன. இந்த நாடுகள் பின்பற்றிய வழிமுறைகளை எமது அறிக்கையில் உள்ளடக்கியுள்ளோம்.ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளது. எந்த தரப்பினர் ஆட்சிக்கு வந்தாலும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும். நாங்கள் முன்வைத்துள்ள அறிக்கையை செயற்படுத்த வேண்டும் என்பதை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.