நாட்டின் தேசிய பாதுகாப்பு வலுவாக உள்ளதோடு பாதாளக்குழுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இலக்கில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்று பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா வீரகேசரியிடம் தெரிவித்தார்.அண்மைய நாட்களில் அதிகரித்துள்ள துப்பாக்கிப் பிரயோகங்கள் தொடர்பிலும், அதனால் நாட்டின் தேசிய பாதுகாப்பில் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ள கடுமையான விமர்சனங்கள் மேலெழுந்துள்ளமை குறித்தும் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதுக்கடை நீதிமன்றத்தின் பிரதிவாதிக்கூண்டில் நின்றவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் துரதிஷ்டவசமானது. நீதிமன்ற வளாகங்களில் சட்டத்தரணிகளை சோதனைக்கு உட்படுத்துவதில்லை என்பதை பயன்படுத்தி அச்சம்பவம் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது, பாதாளக்குழுக்களுக்கு இடையிலான மோதலின் வெளிப்பாடாகும். அதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படவில்லை என்பதை குறிப்பிட்டுக் கூற விரும்புகின்றேன்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை வைத்துத் தான் நாட்டின் தேசிய பாதுகாப்பை மதிப்பீடு செய்ய முடியும். அந்த வகையில் நாட்டின் தேசிய பாதுகாப்பு வலுவாகவே உள்ளது.மேலும், நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை ஒருசில மணிநேரத்துக்குள்ளேயே நாம் கைது செய்துள்ளோம். இதுவொரு முக்கிய மாற்றமாகும். அதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
அத்தோடு நாம் பாதாளக்குழுக்களை கட்டுப்படுத்துகின்ற இலக்கிலிருந்து வெளியேறவில்லை. நாட்டில் சட்டம் ஒழுங்கு பின்பற்றப்பட்டு அமைதியான நிலைமை நீடிக்க வேண்டும் என்பதே எமது பிரதான நோக்கமாகும்.
அதற்காக, சட்டம், ஒழுக்குங்கு பங்கம் ஏற்படுத்துக்கின்ற அனைத்துவகையான செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். குறிப்பாக, நாட்டில் பாதாளக்குழுக்களின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு தீவிரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு அந்த இலக்கினை அடைவதிலும் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.இதேவேளை, சட்டவிரோத சம்பவங்களுடன் தொடர்புடைய படைத்தரப்பினர் மற்றும் பொலிஸார் தொடர்பிலும் உயர்மட்டத்தில் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.