நாட்டுக்குள் வரும்போது 14 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையிலான வருகை விசாவை விமான நிலையத்திலேயே நேரடியாகப் பெற்றுக்கொள்வதற்கு புதிய நடைமுறைகளை அமுல்படுத்துவது தொடர்பில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (02) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, 14 நாட்களுக்கு விசா இன்றி நாட்டுக்குள் வருவதற்கான வாய்ப்பு தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்ட ஏனைய சட்டப்பிரிவு அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவொன்று நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நடைமுறைக்கு சாத்தியமான முறையொன்றை விரைவாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அந்தக் குழுவுக்கு பணிப்பு விடுத்துள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை (03) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செயதியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்‘‘பொருளாதார மாற்றம் தொடர்பான சட்டமொன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டுள்ளது. அதற்கமைய, போட்டித்தன்மை கொண்ட ஏற்றுமதியை பிரதானமாகக்கொண்ட சந்தை பொருளாதாரத்தை உருவாக்கி வினைத்திறனை ஏற்படுத்துவதற்கு டிஜிட்டல் மயத்துக்கு சென்றே ஆகவேண்டும். அதற்கமையவே, டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் மிகவும் பன்முகத்தன்மையாக விலைமனுக்கோரல் மற்றும் கொள்முதல் செயற்பாடுகள் இடம்பெற வேண்டும்.அதன் காரணமாக, நீண்டகாலம் கடவுச்சீட்டுகளை விநியோகித்து வந்த நிறுவனத்துக்குப் பதிலாக வேறு நிறுவனத்திடம் டிஜிட்டல் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டமையின் காரணமாகவே கடவுச்சீட்டு தொடர்பில் பெறும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. இதுதொடர்பில் அமைச்சரவையிலும் அவதானம் செலுத்தப்பட்டது.எமது அவசர நிலைமைக்கேற்ப அந்த நாடுகளில் கடவுச்சீட்டுகளை அச்சிட முடியாது. முன்னேற்றகரமாக முறைகளினூடாகவே இந்த டிஜிட்டல் கடவுச்சீட்டுகள் தயாரிக் கப்படுகின்றன. எமது அவசர நிலைமைக்கேற்ப அச்சிடுவதற்கு நிறுவனமொன்று இல்லாததால் இந்த கொள்முதலுக்கான விலைமனுக்கோரல் செயற்பாடுகளில் பல்வேறு தடைகள் ஏற்பட்டுள்ளன. அதன் காரணமாகவே கடவுச்சீட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதற்காக எங்களின் கவலையையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த செயற்பாடுகளை விரைவுபடுத்துவதற்காக ஜனாதிபதியும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். அதற்கமைய, டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட இந்தக் கடவுச்சீட்டை விட குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளக்கூடிய நவீன கடவுச்சீட்டு எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் கிடைக்கும். அதுவரையான குறுகிய காலத்துக்கு இந்தத் தட்டுப்பாடு இருக்கும். விசா பிரச்சினை தொடர்பிலும் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டது. இதற்கு முன்னர், 38 நாடுகளுக்கு கட்டணமற்ற விசா பெற்றுக்கொடுக்க அமைச்சரவை தீர்மானித்திருந்தது. விசா பெற்றுக்கொடுக்கும்போது பயனாளர்களின் சேவைகளைப் பெற்றுக்கொடுக்க அதிக காலம் எடுப்பதால் சிங்கபூர் போன்று 14 நாட்களுக்கு விமான நிலையத்திலேயே நேரடியாக விசாவை பெற்றுக்கொள்ளும் விதத்தில் விரைவான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.முழுமையாக தமது கடவுச்சீட்டை எடுத்துகொண்டு விமான நிலையத்துக்குச் சென்றால் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் 14 நாட்களுக்கு விசா இன்றி நாட்டுக்குள்வருவதற்கான வாய்ப்பு தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்ட ஏனைய சட்டப்பிரிவு அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினூடாக விரைவாக தீர்வொன்றை வழங்கி ஏனைய நாடுகளைப் போன்று விசா இன்றி நாட்டுக்குவரும் வகையிலான அனுமதியை விமான நிலையத்திலேயே பெற்றுக்கொள்வதற்கான முறையை விரைவாக அறிவிக்குமாறும் விரைவான நடவடிக்கை எடுக்கமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியதாகத் தெரிவித்தார்.