கடற்படை புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம், மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மன்னார் – சிலாவத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாசீம் சிற்றி பகுதியில் வைத்து நேற்று (02) ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதோடு, சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.மீட்கப்பட்ட கேரள கஞ்சா 31 கிலோ 62 கிராம் எடை கொண்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.வை.ஏ.எஸ். சந்திரபாலவின் பணிப்பில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் போதி பக்ஸ என்பவரின் வழிகாட்டலில், மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு தற்காலிக பொறுப்பதிகாரி தலைமையிலான அணியினரே மேற்படி கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்து உள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சவரிபுரம், சிலாவத்துறை பகுதியை சேர்ந்த 47 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் வழக்கு பொருட்கள் மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.