Thursday, March 6, 2025
Homeஇலங்கைமீண்டும் வடக்கில் கிறீஸ் பூதம்? - ஈ.பி.டி.பி. சந்தேகம்

மீண்டும் வடக்கில் கிறீஸ் பூதம்? – ஈ.பி.டி.பி. சந்தேகம்

கடந்த காலங்களில் வடக்கில் கிறீஸ் பூதம் ஏவப்பட்டது போன்று சூழலை உருவாக்க திட்டமிடப்படுகிறதா என்று சந்தேகம் வெளியிட்டுள்ள ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்ச் செல்வம், இதுதொடர்பாக மக்களும் ஊடகங்களும் விழிப்பாக இருக்க வேணடும் எனவும் தெரிவித்துள்ளார்.யாழ். ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது. அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் அரசியல் தரப்புக்களுக்கு இடையிலான மக்கள் நலன் சார்ந்த நிலைப்பாடுகளில் இணைந்து செயற்படுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் தயாராக இருப்பதான சமிக்ஞை எம்மால் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில், பல்வேறு தரப்புக்களும் உத்தியோகப்பற்றற்ற முறையில் எம்மை தொடர்பு கொண்டு வருகின்றனர். அது தொடர்பாக கட்சி மட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.அதேவேளை, கடந்த காலங்களைப் போன்று தனித்துவமான முறையில் வீணை சின்னத்தில் போட்டியிடுவதற்கான தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றோம்.

அது ஒருபுறமிருக்க, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை பொறுத்தவரையில், தற்போதைய அரசாங்கத்தை கண்மூடித்தனமாக விமர்சிக்கும் நோக்கம் இல்லாத போதிலும், சரியான விடயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய தார்மீக கடப்பாடு இருப்பதாக இருப்பதாக கருதுகின்றோம்.அந்தவகையில், யாழ். மாவட்டத்திலிருந்து ஜே.வி.பி. சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி இருக்கின்ற, கௌரவ றஜீவன் ஜெயானந்தமூர்த்தி அவர்களுடைய முகப்புத்தகத்தில் ஒரு செய்தி வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.அதாவது, யாழ். மாவட்டத்தில் காணப்படுகின்ற போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு தொடர்பாக தனிநபர் பிரேரணையை இன்று கொண்டு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இவ்வாறான செயற்பாடுகள் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றவா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகின்ற போது எமது பிரதேசங்களில் போதைப் பொருள் பாவனை அதிகரித்திருக்கிறது. சமூக சீர்கேடுகள் அதிகரித்துள்ளன அவை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதில் மற்றுக் கருத்தில்லை.ஆனால் நாடாளுமன்றில் தனிநபர் பிரேரணை கொண்டுவரும் அளவிற்கு யாழ்ப்பாணத்திற்கு தனித்துவமான பிரச்சினை அல்ல.போதைப் பொருள் பாவனை என்பது நாடாளாவிய ரீதியில் இருக்கின்ற பிரச்சினை கடந்த வாரம்கூட, கொழும்பில் நீதிமன்றத்தினுள் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறான சூழலில் யாழ்ப்பாணத்தில் போதைபொருள் பாவனை அதிகரித்திருப்பதாக தனிநபர் பிரேரணை கொண்டு வருவது யாழ்ப்பாணத்தின் தனித்துவங்களையும், கௌரவத்தினையும் மலினப்படுத்துப்படுத்தும் நிகழ்ச்சி நிரலை அடிப்படையாக கொண்டதோ என்ற சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது.

அதேபோன்று, தேர்தல் காலங்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையிலே தற்போதைய அரசாங்கம் உள்ளூராட்சிமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது.எமது மக்களைப் பொறுத்தவரையில், காணிகள் விடுவிக்கப்படும், காணாமல் போனோர் விவகாரத்திற்கு தீர்வு காணப்படும், அரசியல் கைதிகள் விடுதலை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்குதல் போன்ற விடயங்கள் சொல்லப்பட்ட போதிலும், இதுவரையில் அவை தொடர்பான முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை.இந்நிலையில், கடந்த வாரம் நாடாளுமன்றில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், வடக்கு கிழக்கு பிரதேசத்திலும் ஆயுத ரீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் வாள் வெட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அடிப்படைவாத அமைப்புக்கள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதையும் படியுங்கள்:  இராமநாதன் அர்ச்சுனா இன்று நாடாளுமன்ற அமர்வின் போது ஆற்றிய உரையினால் சபை கடுமையான குழப்ப நிலை

இவற்றை அடிப்படையாக வைத்துப் பார்க்கின்றபோது வடக்கில் கடந்த காலங்களில் கிறிஸ் பூதங்கள் ஏவி விடப்பட்டது போன்று மீண்டும் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு விடுமோ என்ற அச்சம் இருப்பதாகவும், இதுதொடர்பாக மக்களும் ஊடகங்களும் விழிப்பாக இருக்க வேண்டும்.எனவே, தற்போதைய அரசாங்கம் தங்களுடைய இயலாமைகளை மறைப்பதற்காக, எமது மக்களை மலினப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளையும், சுமூகமான சூழலுக்கு குழப்பங்களை ஏற்றபடுத்தும் கருத்துக்களையும் வெளிப்படுத்தக் கூடாது” என்று வலியுறுத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!