வித்தியானந்த கல்லூரி அதிபரினை இடமாற்றம் செய்யக்கோரி பழையமாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பெற்றோர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (03) காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது.முல்லைத்தீவு – முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி அதிபர் கல்லூரியின் வளர்ச்சியை சீர்குலைப்பதாகவும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாகவும், அவரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பெற்றோர்கள் இணைந்து இன்றையதினம் காலை 7.30 மணியளவில் பாடசாலை நுழைவாயிலில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.குறித்த போராட்டமானது 14 ஆசிரியர்களுக்கு அண்மையில் அவர்களுக்கான பதிலீடு இன்றி, தனிப்பட்ட பழிவாங்கல் நோக்கில், இடமாற்றத்திற்கு சிபாரிசு செய்தமை, இவரது பொறுப்பற்ற வார்த்தை பிரயோகங்கள், தனிப்பட்ட பழிவாங்கல்கள் காரணமாக இவர் பாடசாலையை பொறுப்பேற்கும் போது இருந்த ஆசிரியர்கள் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி (83 ஆசிரியர்களிலிருந்து 63 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது) ஏற்பட்டுள்ளது.
இவரால் பாடசாலையின் ஏனைய ஊழியர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டு பாடசாலையின் அகச்சூழல் சீரின்றியும், பாதுகாப்பின்றியும் உள்ளது. பாடசாலை சொத்துகளை பாதுகாப்பது மற்றும் அது தொடர்பான வெளிப்படை தன்மை இல்லாது உள்ளது. (தொழில்நுட்ப ஆய்வுகூட பொருட்கள் காணாமல் போனமை தொடர்பில் கல்வித்திணைக்கள விசாரணைகள் நடைபெறுகின்றன) அதிபர் மீதான நிதிமோசடி விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.குறித்த விடயங்கள் தொடர்பாக அதிபருடன் பல தடவைகள் SDS/ OBA இணைந்து நடத்திய கலந்துரையாடல்களில் மேற்கொண்ட தீர்மானங்கள், ஆலோசனைகள் எதனையும் கருத்தில் கொள்ளாமல் தான்தோன்றிதனமான அதிபரின் செயற்பாடுகளால் மாணவர் கல்வி பாதிக்கப்படுகிறது. குறிப்பாக உயர்தர மாணவர்களுக்கு சில பாடங்களுக்கு பொருத்தமான பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லை. பல பாட வேளைகளில் வகுப்புகள் நடைபெறுவதில்லை. இவ்வாறான காரணங்களாளே குறித்த போராட்டம் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த அதிபர் தொடர்பான விடயங்கள் இரு செயலாளர்களாலும் வலயகல்விபணிப்பாளர், செயலாளர் கல்வி அமைச்சு, பிரதிக் கல்விப்பணிப்பாளர் – தேசிய பாடசாலை, கல்வி அமைச்சு என்பவற்றிற்கு நேரிலும், தொலைபேசியிலும், கடிதம் மூலமும் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படாத நிலையிலே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.போராட்ட இடத்திற்கு சென்ற அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் குறித்த போராட்டத்திற்கான காரணங்களை கேட்டறிந்திருந்தார். அதன்பின்னர் போராட்டத்திற்கான காரணம் தொடர்பான மகஜர் அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் இது ஒரு தேசிய பாடசாலை ஆகையினால் மாகாணத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரம் தான் இருக்கின்றது. எனவே மத்திய அரசின் கல்வி அமைச்சின் செயலாளருக்கு இந்த மகஜரை அனுப்புவதாகவும், அதன் பிரதியை சம்பந்தப்பட்ட அரச அலுவலகங்களுக்கு வழங்கி இதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும் அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்திருந்தார்.குறித்த போராட்டத்தில் பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தினர், பெற்றோர்கள், பழையமாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.