1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகனின் உடல்கள் 38 ஆண்டுகளுக்குப் பின்னர் அண்மையில் மத சடங்குகளுடன் தகனம் செய்யப்பட்டன.மனைவி மற்றும் குழந்தை உயிரிழந்த பின்னர், வீட்டின் நடுவில் ஒரு குழி தோண்டி அவர்களின் உடல்களை அங்கேயே புதைப்பதைத் தவிர வேறு எதையும் செய்ய கணவருக்கு போர் சூழலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.இதனால் இருவரையும் அவர் வீட்டிற்குள்ளேயே புதைத்தார். இதனையடுத்து இந்தியாவுக்குச் சென்ற அவர், பின்னர் ஒரு ஐரோப்பிய நாட்டிற்குச் சென்று அங்கு தஞ்சம் புகுந்தார்.இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் திரும்பிய அவர், தனது மனைவி மற்றும் பிள்ளையின் உடல்களை தோண்டி எடுத்து மீண்டும் தகனம் செய்ய அனுமதி கோரி யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் மனு ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சம்பவம் குறித்த விரிவான அறிக்கையை பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர், இதனையடுத்து இரு உடல்களையும் தோண்டி எடுத்து தகனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
தனது மனைவி மற்றும் குழந்தையின் மரணத்திற்குப் பின்னர், அவ்வாறு செய்வதை தவிர வேறு வழியில்லை என்று கணவர் குறிப்பிட்டுள்ளார்.இருவரையும் வீட்டின் நடுவில் அடக்கம் செய்ய வேண்டிய வலி தனக்குத் தாங்க முடியாததாலும், உரிய சடங்குகளை நடத்தி இறுதிச் சடங்கை நடத்த விரும்பியதாலும் சட்ட உதவியை நாடி அதனை நிறைவேற்றியதாக குறிப்பிட்டுள்ளார்.