பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கத்துக்கான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் (21.01.2025) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் அடிப்படை கட்டுமானங்கள் மற்றும் வசதிகளை துரிதமாக மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினர், முதல்கட்டத்தில் இந்தப் பணிகளை முழுமைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டனர்.
சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கம் முன்னெடுப்பதற்கு 114 ஹெக்டேயர் நிலப் பரப்பு சுவீகரிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினர் குறிப்பிட்டனர்.
கடலை நோக்கியதாக அந்த விஸ்தரிப்பு அமையும் எனவும் ஆளுநருக்கு தெரியப்படுத்தினர். காணிகளை சுவீகரிப்பதற்கு முன்னதாக 1986ஆம் ஆண்டு பலாலி விமான நிலையத்துக்காக பெற்றுக் கொள்ளப்பட்ட காணிகளுக்கு இன்னமும் இழப்பீடு வழங்கப்படவில்லை என ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய பெறுமதிக்கு ஏற்ப அவர்களுக்கு இழப்பீடு முதல்கட்டமாக வழங்கிய பின்னரே தற்போது தேவைப்படும் மேலதிக காணிகளுக்காக சுவீகரிப்பை ஆரம்பிக்கலாம் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் விரிவாக்கத்தின்போது இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகளவில் கிடைக்கும் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகளுக்கான நிறுவனத்தினர் தெரிவித்தனர்.உள்ளூர் விமான சேவைகள விரிவுபடுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டது. கொழும்பு – யாழ்ப்பாணம், மட்டக்களப்பு – யாழ்ப்பாணம் சேவைகளை முன்னெடுப்பதற்கு, பயணிகளின் தேவைப்பாடு தொடர்பான துல்லியமான தகவல்களை வழங்குமாறு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
தற்போது சேவையை முன்னெடுக்கும் இண்டிகோ விமான சேவை நிறுவனம் சென்னை – யாழ்ப்பாணம் சேவைக்கு மேலதிகமாக பெங்களூர் – யாழ்ப்பாணம் சேவையை முன்னெடுப்பது தொடர்பாகவும் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்கா அவர்கள் இந்த மாத இறுதியில் யாழ்ப்பாணத்துக்கு வரவுள்ளதாகவும் இதன்போது அபிவிருத்திக்கான நிதி மூலம் தொடர்பில் இறுதி செய்யலாம் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினர் தெரிவித்தனர். இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண பிரதம செயலர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், தெல்லிப்பழை பிரதேச செயலர், இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிராந்திய முகாமையாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.