யாழ்ப்பாணம் மாவட்ட சுற்றாடல் குழு கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் நேற்றைய தினம் (06.02.2025) பி. ப 03.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், கிளீன் ஶ்ரீலங்கா செயற்றிட்டத்தில் சுற்றாடல் தூய்மையும் உள்ளடங்குவதால் கழிவகற்றல் பொறிமுறை சிறப்பாக இருத்தல் வேண்டும் எனவும், அதற்கு முதற்கட்டமாக பாடசாலை மாணவர்களிடமிருந்து விழிப்புணர்வு செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கு உள்ளூராட்சி அமைப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதேச ரீதியாக பொது மக்களின் கருத்துக்களையும் உள்வாங்கி கழிவகற்றல் பொறிமுறையினை உருவாக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், சண்டிலிப்பாய் மற்றும் கோப்பாய் பிரதேச செயலகங்களில் முன்னோடி செயற்றிட்டமாக பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய திணைக்களத் தலைவர்களுடன் கலந்துரையாடி பொறிமுறையினை உருவாக்கிச் செயற்படுத்துமாறும் கேட்டுக் கொண்டதுடன், சுண்ணக்கல் அகழ்வு தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்திற்குரிய பிரதேச செயலாளர்/உதவிப் பிரதேச செயலாளர், புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியக பொறியியலாளர்,பிரதேச சபைச் செயலாளர் மற்றும் பொலிசார் ஆகியோர் அடங்கியவகையில் குழு அமைத்து சிபார்சு செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.
மேலும், இக் கூட்டத்தில் நகர்புறங்களில் காணப்படும் கழிவகற்றல் பிரச்சினைகள், திண்ம கழிவு முகாமைத்துவம், வளி மாசு மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை வைத்திய அதிகாரி, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உதவி ஆணையாளர், புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியக அகழ்வுப் பொறியியலாளர், கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.