Wednesday, January 22, 2025
Homeஇலங்கையாழ். கலாசார நிலையப் பெயர் மாற்றம் மக்களின் நாடித்துடிப்பு அறியாத செயல் -பொ.ஐங்கரநேசன் ஆதங்கம்

யாழ். கலாசார நிலையப் பெயர் மாற்றம் மக்களின் நாடித்துடிப்பு அறியாத செயல் -பொ.ஐங்கரநேசன் ஆதங்கம்

இந்திய அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் கலாசார பாரம்பரியங்களின் மேம்பாட்டுக்காக நிர்மாணிக்கப்பட்டதும் தனித்துவமிக்கதுமான யாழ்ப்பாண கலாசார நிலையம் 2023 பெப்ரவரி 01ஆம் திகதி மக்களுக்கு உரித்தாக்கப்பட்டது. திறப்புவிழாக் கல்வெட்டில் அழியாத எழுத்துகளால் அழகாகப் பொறிக்கப்பட்டிருக்கும் வாசகம் இது. ஆனால், மக்களுக்கு உரித்தாக்கப்பட்டு இரண்டு வருடங்கள்கூடக் கடக்காத நிலையில் அம்மக்களின் அபிப்பிராயங்கள் எதுவும் பெறப்படாது யாழ்ப்பாண கலாசார நிலையம் திருவள்ளுவர் கலாசார நிலையம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இது மக்களின் நாடித்துடிப்பு அறியாத செயல் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

யாழ். கலாசார நிலையத்தின் பெயர் மாற்றம் குறித்து பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.அந்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண கலாசார நிலையம் யாழ். மாநகரசபைக்கு உரித்தான காணியில் இந்திய அரசின் நன்கொடையில் உருவானது. இதற்கான உடன்படிக்கையில் யாழ். கலாசார நிலையத்தை முகாமைத்துவம் செய்கின்ற குழுவில் யாழ் மாநகரசபையினதும் வடமாகாண சபையினதும் சார்பில் ஒவ்வொருவர் இடம்பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இரண்டு சபைகளினதும் கலந்தாலோசிப்புகளின்றி இப்பெயர் மாற்றம் இடம்பெற்றுள்ளது.

கோத்தபாய அரசாங்கம் யாழ். கலாசார நிலையத்தின் பெயரை மாற்றுமாறு முன்னர் அழுத்தங்களைப் பிரயோகித்தபோது மாநகரசபையின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. இப்போது, இரு சபைகளுக்குமான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் திடுதிப்பென்று நிகழ்ந்த இப்பெயர் மாற்றம் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையை இந்தியா நாசுக்காக நிறைவேற்றிக்கொடுத்துள்ளது என்றே எண்ணவைத்துள்ளது.

சமயச்சாயத்தை தன் மீது ஒருபோதும் பூசிக்கொள்ளாத திருவள்ளுவரின் பெருமையை ஈழத்தமிழ் மக்கள் எப்போதும் போற்றுபவர்களாகவே உள்ளார்கள். அவர் தமிழுக்குத்தந்த பெரும் கொடையாம் திருக்குறளின் மகிமையை ஈழத்தமிழ் மக்கள் ஒரு போதும் மறவார்கள். இதனாலேயே, தமிழகத்தில் வள்ளுவர் கோட்டத்தில் உள்ளதைப்போன்று அத்தனை குறள்களையும் காலத்தால் அழியாதவாறு கருங்கல்லில் பொறித்து திருக்குறள் வளாகம் ஒன்றைச் சிவபூமி தாபகர் கலாநிதி ஆறு திருமுருகன் யாழ்ப்பாணத்தில் உருவாக்கியுள்ளார். ஆனால், இத்தகைய பெரும் பற்றைத் திருவள்ளுவர் மீதும் திருக்குறள் மீதும் கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களிடையே யாழ் கலாச்சார மையத்துக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளமை பெரும் அதிருப்தியையே தோற்றுவித்துள்ளது.

யாழ். கலாசார மையம் தனித்துவமானதெனத் திறப்புவிழாக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று அது இந்தியா எமக்கு உவந்தளித்த தனித்துவமான பெரும் கொடையே ஆகும். ஆனால், அதன் தனித்துவம் நெடிதுயர்ந்த அழகான அதன் கட்டுமானங்களால் மாத்திரம் உருவானதன்று. பண்பாட்டுச் செழுமையும் பாரம்பரியமும் மிக்க யாழ்ப்பாணம் என்ற பெயரைச் சூடியிருப்பதும் அதன் தனித்துவத்தை வெளிப்படுத்தும் அளப்பரிய ஓர் சிறப்பாகும். இப்போது, பெயர் மாற்றப்பட்டிருப்பதன் மூலம் அதன் தனித்துவம் ஒரு படி கீழிறங்கியுள்ளது என்பதே நிதர்சனம். அது மட்டுமல்ல, இப்பெயர் மாற்றத்தின் மூலம் ஈழத்தமிழ் மக்கள் இந்தியா மீது கொண்டிருக்கும் பெரும் நம்பிக்கையிலும் ஒரு படி கீழிறங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:  இன்றைய வானிலை முன்னறிவிப்பு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!