ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவர் மரணமடைந்தால், அவருக்குப் பதிலாக வேறொருவரை நியமிக்க சந்தர்ப்பம் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்புமனுவை சமர்ப்பித்த கட்சி அல்லது நபருக்குப்பதிலாக அவர் சார்பில் வேறொருவரை நியமிக்க சந்தர்ப்பம் இருப்பதாக தெரிவித்தார்.நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு 39 வேட்பாளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.இருப்பினும், இவர்களுள் மாரடைப்பு காரணமாக ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட மொஹமட் இல்யாஸ் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார்.இந்நிலையில், அவரது பெயர் வாக்குச்சீட்டிலிருந்து நீக்கப்படமாட்டாது என்று தெரிவித்த தேர்தல் ஆணையாளர் நாயகம், அவருக்கு பதிலாக அவர் சார்பில் வேறொருவரை நியமிக்க இடம் உள்ளதாக கூறினார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலை நடத்த திட்டமிட்டபடி அனைத்து நடவடிக்கைகளும் தாமதமின்றி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.1994 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட காமினி திஸாநாயக்க குண்டுத் தாக்குதலில் உயிரிழந்ததையடுத்து, அவருக்குப் பதிலாக அவரது மனைவி திருமதி திஸாநாயக்க முன்னிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.