திருகோணமலை, ஸ்ரீபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்மம்பில கிராமத்தில் பிள்ளையார் கோயில் சந்தியில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் ஆறு சந்தேக நபர்கள் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீபுர பொலிஸார் தெரிவித்தனர்.திருகோணமலை, ஸ்ரீபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்மம்பில கிராமத்தில் பிள்ளையார் கோயில் சந்திக்கு கடந்த 16 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் வயல் காவலில் ஈடுபட்டிருந்த நபரொருவரை சுட்டுக் கொலை செய்து தப்பிச் சென்றிருந்தனர்.இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஆறு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.வெலி ஓயா, பதவிய, கெப்பத்திகொல்லாவ மற்றும் பராக்கிரமபுரம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 20, 22, 38, 40 மற்றும் 47 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.துபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த பாதாள பிரியந்த என்று அழைக்கப்படும் குணசிறி பிரியந்த என்பவரின் தலைமையில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கு வைக்கப்பட்டவர் இல்லை எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஸ்ரீபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.