2024 ஆம் ஆண்டுக்கான கல்விபொதுதராதரப்பத்திர சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது.குறித்த பரீட்சைக்காக 4 இலட்சத்து 74, 147 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், 3, 663 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இவர்களில் 3 இலட்சத்து 98, 182 பேர் பாடசாலை பரீட்சாத்திகள் எனவும், 75, 965 பேர் தனியார் பரீட்சார்த்திகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு ஏதுவான வகையில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, இரத்மலானை, தங்காலை, மாத்தறை மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளில் விசேட தேவையுடைய பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அத்துடன், மெகசின் சிறைச்சாலை மற்றும் வட்டரக்க சுமேதா வித்தியாலயத்தில் சிறைக்கைதிகள் மற்றும் புனர்வாழ்வு பெற்றுவருவோருக்காக பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அதேநேரம், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையிலும் பரீட்சை நிலையமொன்று அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, தற்போது சீரற்ற காலநிலையினால் ஏதேனும் இடையூறுகள் ஏற்படுமாயின் அது தொடர்பில் அறிவிப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் விசேட தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ளது.
அதன்படி, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் துரித இலக்கமான 117க்கு அல்லது 0113 668 020 அல்லது 0113 668 100 என்ற இலக்கத்திற்கு தெரியப்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, பரீட்சைகள் தொடர்பில் ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்படுமாயின் பரீட்சார்த்திகள் அது குறித்து 1911 என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் துரித இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி அறியப்படுத்துமாறும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.அதேநேரம், சகல பரீட்சார்த்திகளும் பரீட்சை நிலையத்துக்கு உரிய நேரத்துக்கு வருகைத்தர வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் ஜீவராணி புனிதா தெரிவித்துள்ளார்.