உக்ரைனின் முன்னாள் அதிபர் விக்டர் யானுகோவிச்சின் ஆலோசகராக செயல்பட்டு வந்தவர் ஆண்ட்ரி போர்ட்னோவ். கடந்த 2010 முதல் 2014 வரை உக்ரைன் அதிபர் அலுவலகத்தின் துணைத் தலைவராக பணியாற்றிய இவர், விக்டர் யானுகோவிச்சுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்தார்.விக்டர் யானுகோவிச் ஆட்சிக் காலத்தின்போது பெரும்பாலும் ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஆண்ட்ரி போர்ட்னோவ் பின்பற்றி வந்தார். மேலும் உக்ரைனில் 2014-ம் ஆண்டு நடந்த மாபெரும் புரட்சியில் பங்கேற்ற போராட்டக்காரர்களுக்கு எதிரான சட்டங்களை இயற்றியதில் ஆண்ட்ரி போர்ட்னோவ் முக்கிய பங்காற்றினார்.இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள ஒரு பள்ளிக்கு வெளியே ஆண்ட்ரி போர்ட்னோவ் இன்று காலை 9.15 மணியளவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தகவலை ஸ்பெயின் உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.