கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார். மேலும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார்.அவரது பொருளாதார நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் சொந்த கட்சியிலேயே எதிர்ப்பை சந்தித்தார். அவருக்கு எதிராக பெரும்பாலான எம்.பி.க்கள் உள்ளனர். இதையடுத்து பதவி விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.இந்நிலையில் நிலைமையை சாதகமாக பயன்படுத்தி டிரம்ப் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். கனடா பிரதமர் பதவி விலகல் குறித்து தனக்கு சொந்தமான ட்ரூத் சமூக வலைத்தளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார். அதில், கனடாவில் உள்ள பலர் தங்கள் நாடு அமெரிக்காவின் 51வது மாகாணமாக இருப்பதை விரும்புகிறார்கள். கனடா அமெரிக்காவின் தயவில்தான் இருக்கிறது. நாம் அவர்களுக்கு நிதி உதவி கொடுக்கிறோம். நிறைய சலுகைகள் கொடுக்கிறோம். ஏற்றுமதி, இறக்குமதி வாய்ப்பு தருகிறோம்.இனி அப்படி எல்லாம் வழங்க முடியாது. ஜஸ்டின் ட்ரூடோ இதை அறிந்திருந்தார், ராஜினாமா செய்தார். கனடா அமெரிக்காவுடன் இணைந்தால், வரிகள் இருக்காது, வரிகள் வெகுவாகக் குறையும், மேலும் அவர்களைச் சுற்றி தொடர்ந்து இருக்கும் ரிஷிய மற்றும் சீனக் கப்பல்களின் அச்சுறுத்தலிலிருந்து அவர்கள் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பார்கள்.ஒன்றாகச் சேர்ந்தால், அது எவ்வளவு சிறந்த தேசமாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார். சமீப காலமாகவே அமெரிக்காவுடன் கனடா இணைய வேண்டும் என்ற வாதத்தை டிரம்ப் முன்வைத்து வருகிறார். கடந்த நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப் வரும் ஜனவரி 20 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.