அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப்பும் மீண்டும் களம் காண்கிறார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் மீண்டும் களம் காண்பாரா அல்லது கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனிடைய கடந்த 14-ம் தேதி அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், பட்லர் நகரில் நடைபெற்ற பிரச்சாரகூட்டத்தில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் துப்பாக்கியால் சுடப்பட்டார். மொத்தம் 8 குண்டுகள் சீறிப் பாய்ந்த நிலையில், ஒரு குண்டு ட்ரம்பின் வலது காதை துளைத்துச் சென்றதில் அவர் நூலிலையில் உயிர் தப்பினார். இதையடுத்து அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பரப்புரையை இருகட்சிகளும் மேலும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 81 வயதான ஜோ பைடன், லாஸ் வேகாசில் நடைபெற்ற NAACP என்ற சிறுபான்மையின நல அமைப்பின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டார். அதன் பின்னர், அவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் சுவாசக்கோளாறு ஏற்பட்டதால், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்நிலையில், டெலாவேர்(DELAWARE) நகரில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட பைடன், வீட்டில் இருந்தே அலுவலகப் பணிகளை கவனிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.