இஸ்ரேல் இராணுவத்துக்கும், லெபனான் ஹிஸ்புல்லா அமைப்புக்குமிடையில் கடும் மோதல் மூண்டுள்ளதால், இஸ்ரேலில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலின் வடக்கு எல்லைகள் மீது ஹிஸ்புல்லா அமைப்பு கடுமையான ரொக்கட் தாக்குதல்களைத் தொடுத்ததால்,பதற்றம் மேலும் அதிகரித்தது. இதற்குப் பதிலடியாக வான் தாக்குதல்களை நடத்திய இஸ்ரேல் இராணுவம், வடக்கு எல்லையிலுள்ள இஸ்ரேலியர்களை பாதுகாப்பாக வௌியேறுமாறும் நேற்று உத்தரவிட்டது.அவசரகால நிலை, அறிவிக்கப்பட்டதால் விமான நிலையங்களும் மூடப்பட்டன.இதையடுத்து ஐரோப்பிய நாடுகள் பல, நேற்று இஸ்ரேலுக்கான விமானப்பயணங்களை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளன.லெபனானின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாகவும் ஹமாஸ் அமைப்பின் தலைவர் சயீத் கொலைக்கு பதிலடி கொடுக்கவும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் வடக்கு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ஹிஸ்புல்லா படையினர், 70 ராக்கெட் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்நிலையில் ஹிஸ்புல்லா தாக்குதலை அடுத்து 48 மணி நேரத்திற்கு ராணுவ அவசர நிலையை இஸ்ரேல் அறிவித்துள்ளது. பிரதமர் நெதன்யாகு தலைமையில் கூடிய இராணுவ அமைச்சரவை கூட்டம் அவசர நிலையை பிறப்பித்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.