சீனாவின் ஹுனான் மாகாணத்தில் சுரங்கத்தில் ரூ.7 லட்சம் கோடி மதிப்புள்ள தங்கம் கண்டுபிடிப்பு

தங்கத்தை தோண்டி எடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.தங்க இருப்பு சீனாவின் பொருளாதாரம் உயர்வதற்கு உதவியாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.சீனாவின் ஹுனான் மாகாணத்தில் மிகப்பெரிய தங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு பிங்ஜியாங் கவுண்டியில் வாங்கு தங்கச் சுரங்கம் உள்ளது.தரையில் இருந்து 2 ஆயிரம் மீட்டருக்கும் குறைவான ஆழத்தில் அமைந்து உள்ள இந்த சுரங்கத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் தங்கம் குவிந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சுரங்கத்தின் முக்கிய பகுதியில் உள்ள மொத்த தங்க இருப்பு தற்போது 300.2 டன்களை எட்டியுள்ள நிலையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இருப்புகளில் 1,000 டன் தங்கம் உள்ளது. இதன் மதிப்பு சுமார் 600 பில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 7 லட்சம் கோடி) ஆகும். இந்த தங்கத்தை தோண்டி எடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.இது குறித்து ஹுனான் மாகாண புவியியல் நிறுவனத்தின் துணைத் தலைவர் லியு யோங்ஜுன் கூறும் போது, இந்த கண்டுபிடிப்பு சீனாவின் கனிம ஆய்வு உத்திக்கு கிடைத்த பெரும் வெற்றி என்றார்.

வாங்கு சுரங்கம் சீனாவின் மிக முக்கியமான தங்கச் சுரங்கங்களில் ஒன்றாகும். இங்கு கனிம ஆய்வுக்காக 2020-ம் ஆண்டு முதல், மாகாண அரசாங்கம் 100 மில்லியன் யுவான் (சுமார் ரூ. 115 கோடி) முதலீடு செய்து உள்ளது.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தங்க இருப்பு சீனாவின் பொருளாதாரம் உயர்வதற்கு உதவியாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.சீன அரசு 2021-2025-ம் ஆண்டு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வளங்களின் உள்நாட்டு இருப்புக்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. கனிம ஆய்வுக்கான முதலீட்டை ஆண்டுக்கு ஆண்டு 8 சதவீதம் உயர்த்தி 110.5 பில்லியன் யுவானாக (சுமார் ரூ. 1.27 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here