Wednesday, April 2, 2025
Homeஉலகம்சீனாவில் தன் தாய்க்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த 13 வயது சிறுவன்

சீனாவில் தன் தாய்க்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த 13 வயது சிறுவன்

பிரசவ வலி என்பது சாதாரணமானது அல்ல. பெண்களுக்கு பிரசவம் என்பது அவர்களுடைய மறுபிறவி என்று சொல்லப்படுகிறது. பிரசவ வலி பல சமயங்களில் கடுமையாக இருக்கும். அதனால்தான் பெண்கள் இதைப் பற்றி பயப்படுகிறார்கள். எனினும், பிரசவம் முறைப்படி மருத்துவமனைகளிலேயே பார்க்க வலியுறுத்தப்படுகிறது. ஆனால், அதைக் கேட்காத சிலர், இன்றும் யூடியூப் வீடியோக்களைப் பார்த்தபடியே பிரசவம் பார்க்கின்றனர். இதனால் தாய்க்கும் சேய்க்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில், சீனாவில் 13 வயது சிறுவன் தனது தாய்க்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார்.

சீனாவைச் சேர்ந்த ஃபுஜியன் மாகாணத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. 13 வயது சிறுவன் ஒருவன் அவசர சிகிச்சை மையத்தை அழைத்து, தனது 37 வார கர்ப்பிணித் தாயின் பனிக்குடம் உடைந்து விட்டதாகவும், அவருக்கு கடுமையான வலி ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், செல்போனில் மருத்துவ உதவியாளர் சென் சாயோஷூனின் ஆலோசனையின் படி தனது தாய்க்கு சிறுவன் பிரசவம் பார்த்துள்ளார். இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சிறிது நேரத்திற்குப் பிறகு, மருத்துவ உதவியாளர்கள் வந்து தாயையும் குழந்தையையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

இந்தச் செய்தி, சீன சமூக ஊடகங்களில் வைரலாகிய நிலையில் அதை, 92 மில்லியனுக்கும் அதிகமான பேர் பார்வையிட்டுள்ளனர். தவிர, அந்தச் சிறுவனின் செயல்பாட்டைப் பாராட்டியுள்ளனர். அதேநேரத்தில், இதுதொடர்பாக சிலர் எதிர்வினையாற்றியும் உள்ளனர். “அந்தப் பெண் ஏன் இவ்வளவு மோசமான நிலையில் தனியாக விடப்பட்டார்” என்றும், “இது பாராட்டப்பட வேண்டிய ஒன்றல்ல. பிரசவம் மற்றும் குழந்தை பிறக்கவிருக்கும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை எப்படி வீட்டில் தனியாக விட முடியும்? கணவன் மற்றும் மாமியார் மிகவும் பொறுப்பற்றவர்களாகத் தெரிகிறது” என விமர்சித்துள்ளனர்.

இதுகுறித்து ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்த மகப்பேறு செவிலியரான ஜாங் ஃபஞ்சு, “வீட்டுப் பிரசவங்கள் ஆபத்தானவை. குடும்ப உறுப்பினர்கள் பெண்ணின் நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து, சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்” என அறிவுறுத்தினார்.

இதையும் படியுங்கள்:  சரத் பொன்சேகா மீதான குண்டுத் தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!