அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் மன்னிப்பு கேட்க உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி மறுப்பு தெரிவித்துள்ளார்.ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக நேற்று (28 ) வொஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கிக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் நிறைவுபெற்றது.இந்தச் சந்திப்புக்குப் பிறகு, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் போது தான் எந்த “தவறும்” செய்ததாக தெரியவில்லை எனவும், ட்ரம்ப்பிடம் மன்னிப்பு கேட்க எந்த காரணமும் இல்லை எனவும் உக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார்.கடுமையான வாக்குவாதத்தின் பின் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி இதனைத் தெரிவித்தார்.