கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் வாடிகன் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில், தற்போதுவரை அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் குணமடைய பிரார்த்தனை செய்யும்படி கத்தோலிக்கர்களை வாடிகன் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.வாடிகன் நிர்வாகம் வெளியிட்ட இந்த அறிக்கையால் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் கவலை அடைந்துள்ளனர்.