Monday, March 31, 2025
Homeஉலகம்மியான்மரில் தொடரும் சோகம் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்ததால் அதிர்ச்சி

மியான்மரில் தொடரும் சோகம் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்ததால் அதிர்ச்சி

மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் நேற்று முன் தினம் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவான நிலையில், நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டது.அடுத்தடுத்து தாக்கிய நிலநடுக்கங்களால் மியான்மரில் பல நகரங்களில் வானுயர கட்டிடங்கள் சீட்டு கட்டுப்போல் சரிந்து, தரைமட்டமாகின. சாலைகள் பெயர்ந்தன. பாலங்கள் இடிந்தன. அதோடு இந்த நிலநடுக்கத்தால் மியான்மரின் மிகப்பெரிய அணையும் உடைந்தது. நிலநடுக்கத்தால் நேபிடாவ், மண்டலே ஆகிய 2 நகரும் பெரும் சேதத்தை சந்தித்தன.நேபிடாவில் புத்தர் கோவில் உள்பட வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. அதேபோல மண்டலே நகரில் உள்ள பழமையான அரண்மனையும் இடிந்தது. நிலநடுக்கத்தால் தரைமட்டமான கட்டிடங்களில் இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் பலியாகினர். படுகாயம் அடைந்தனர்.ஒட்டு மொத்த நாட்டையும் நிலநடுக்கம் உலுக்கியதை தொடர்ந்து மியான்மர் ராணுவ அரசாங்கம் நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தியது. அதோடு நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளை அரசு முடுக்கிவிட்டது. எனினும் ராணுவம்-கிளர்ச்சி குழுக்கள் இடையேயான மோதல் மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகளை சிக்கலாக்கி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே மியான்மரை புரட்டிப்போட்ட இந்த பயங்கர நிலநடுக்கம் அதன் அண்டை நாடுகளில் ஒன்றான தாய்லாந்திலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது.தலைநகர் பாங்காக் உள்பட தாய்லாந்தின் பல நகரங்களை நிலநடுக்கம் தாக்கியது. அங்கும் வானுயுர கட்டிடங்கள் உள்பட ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். தாய்லாந்திலும் நிலநடுக்கம் பாதித்த அனைத்து பகுதிகளிலும் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நிலநடுக்கத்துக்கு 150-க்கும் மேற்பட்டோர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருந்தன. தற்போது மியான்மரில் மட்டுமே பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துவிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2,300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே நிலநடுக்கத்தால் மோசமான பாதிப்பை சந்தித்துள்ள மியான்மருக்கு உலக நாடுகள் ஆதரவு கரம் நீட்டி வருகின்றன. இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளும் நிவாரண பொருட்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவை மியான்மருக்கு அனுப்பி உள்ளன.

இதனிடையே மியான்மரில் நேற்று மதியம் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் நேபிடாவை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகளாக பதிவானது. சில வினாடிகளுக்கு நீடித்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. எனினும் புதிய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல் இல்லை. அடுத்தடுத்து தாக்கும் நிலநடுக்கங்களால் மியான்மர் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.இந்நிலையில் மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் தற்போது 3-வது நாளாக மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்:  உக்ரைனுக்கு வழங்கப்பட்ட ராணுவ உதவிகளை நிறுத்திய அமெரிக்கா - டிரம்ப் அதிரடி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!