இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கைப் பிரஜை ஒருவர் அயர்ன் டோம் பாதுகாப்பு அமைப்பினால் இடைமறித்த ஏவுகணையில் இருந்து உருவான குப்பைகளால் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வடக்கு இஸ்ரேலின் லெபனான் எல்லைக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.அழிக்கப்பட்ட ஏவுகணையின் உலோகத் துண்டு ஒன்று அவரைத் தாக்கியதில் நபருக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரவிடம் அத தெரண வினவியபோது, குறித்த நபரின் நிலை கவலைக்கிடமாக இல்லை என உறுதிப்படுத்தினார்.உள்வரும் தாக்குதல்கள் குறித்து எச்சரிக்கும் சைரன்களுக்கு பதிலளிக்கும் வகையில் தொழிலாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதுகாப்பான அறைகளுக்கு விரைந்ததால் இந்த சம்பவம் நடந்துள்ளது.இஸ்ரேல்-லெபனான் எல்லையில் ஷெல் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் அதிகரித்துள்ளதை வலியுறுத்திய தூதுவர் பண்டார, தாக்குதலைக் குறிக்கும் சைரன் ஒலியைக் கேட்டவுடன் இஸ்ரேலில் பணிபுரியும் அனைத்து இலங்கையர்களும் உடனடியாக தஞ்சம் அடையுமாறு அறிவுறுத்தினார்.