உயிர்த்த ஞாயிறு பண்டிகையை முன்னிட்டு, கிறிஸ்தவத் தேவாலயங்களைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று விசேடப் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.அதன்படி, காவல்துறை அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படைகளின் அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக அனைத்துக் காவல்துறை உயரதிகாரிகளுக்கும் பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய அண்மையில் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தரும் தேவாலயங்களை அடையாளம் கண்டு, அவற்றைச் சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.அதன்படி, விசேடமாகப் பிரதான ஆராதனைகள் நடைபெறும் தேவாலயங்கள் குறித்த அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் பதில் காவல்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே உயிர்த்த ஞாயிறு தினத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பாதுகாப்பு செயலாளர் அண்மையில் முப்படைகளின் தளபதிகளுக்கும் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிட்டுள்ளார்.