கொழும்பு – கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணத்துடன் சம்பந்தப்படுத்தப்படும் தனியார் கற்கை நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என, சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமுலாக்கல் பிரிவின் பணிப்பாளர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.உயிர்மாய்த்துக் கொண்ட சிறுமியின் தாயாரது வாக்குமூலத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு, அவருக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பாகத் தொடர்ச்சியான விசாரணைகள் இடம்பெறுகின்றன.தாயாரின் வாக்குமூலத்தை மாத்திரம் அடிப்படையாக வைத்துக் குறித்த மேலதிக வகுப்பின் உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கச் சட்டத்தில் இடமில்லை.இதுதொடர்பாக குறித்த தனியார் வகுப்பைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்களின் வாக்குமூலங்கள் பதிவாகியுள்ளன.எந்தவொரு நபரும் அந்த வகுப்பு நிலையத்தின் உரிமையாளருடன் தொடர்புபடுத்தப்படும் சம்பவம் குறித்து நேரடியான சாட்சிகளை வழங்கவில்லை.எவ்வாறாயினும் இந்த விசாரணைகள் கைவிடப்படாமல் தொடர்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.அதேநேரம், குறித்த மாணவி கடந்த ஆண்டு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆசிரியர் தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாமை மற்றும் கல்வி அமைச்சுக்கு அறியப்படுத்தாமை தொடர்பான பிரச்சினை ஒன்று உள்ளது.இதுதொடர்பாக குறித்த மகளிர் பாடசாலையின் அதிபரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது என்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்ட அமுலாக்கல் பிரிவின் பணிப்பாளர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.