Home » சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்து விட்டதாக பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் காட்டம்

சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்து விட்டதாக பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் காட்டம்

by newsteam
0 comments
சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்து விட்டதாக பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் காட்டம்

இந்த அரசாங்கம் பதவிக்கு வந்ததிலிருந்து இதுவரை 70 க்கு மேற்பட்ட மனிதப் படுகொலைகள் நடந்துள்ளதாகவும் , சட்டமும் ஒழுங்கும் சீரழிந்து,நாட்டில் நீதியின் ஆதிபத்தியம் பாரிய சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.வரவு செலவுத் திட்ட விவாத வாக்கெடுப்புக்கு முன்னர் , செவ்வாய்க்கிழமை (24) சில முக்கிய விடயங்கள் தொடர்பில் நீண்ட உரையொன்றை ஆற்றியபோது ,படுகொலைச் சம்பவங்களையும் மையப்படுத்தி அவர் கூறியதாவது,

இந்த சபையில் நீதியமைச்சரும் இருப்பதன் காரணமாக, ஒரு முக்கிய விடயத்தைப் பற்றிக் கூற வேண்டும். இன்று காலையில் எதிர்க்கட்சித் தலைவர் தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக் காட்டினார் .தேசிய பாதுகாப்பு என்பதைவிட , பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது. இந்த அரசாங்கம் பதவிக்கு வந்ததிலிருந்து மனித படுகொலைகள் 70 க்கு மேல் நடந்துள்ளன. இது சம்பந்தமாக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன ?

கனேமுல்ல சஞ்சீவ நீதிமன்றத்துக்குள் சுட்டுக் கொல்லப்பட்டு 48 மணி நேரத்துக்குள் , கைது செய்யப்பட்ட இருவரை பொலீசார் கொன்றுள்ள னர் .இது மிகவும் பாரதூரமான விடயமாகும்.இதுபோன்ற விடயத்தில் ஜனாதிபதி அப்பொழுது எதிர்க்கட்சியில் இருந்தபோது கூறியவை இப்பொழுது சமூக வலைத்தளங்களில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை சுட்டு விட்ட பின்னர் ,சிறு பிள்ளைகள் சண்டையிடும் பொழுது மாற்றிக் கூறுவதைப் போலாவது சொல்லுங்களேன் என எதிர்க்கட்சியில் இருக்கும் பொழுது அரசாங்கத்திற்குச் சொல்லிச் சிரித்தார். இப்பொழுது அவரது அரசாங்கத்திலேயே அது நடைபெறுகின்றது.

நேற்று ,இலங்கை சட்டமன்றம் பதில் பொலிஸ்மா அதிபருக்கு வற்புறுத்தி கூறியுள்ள விடயம் என்னவென்பது நீதி அமைச்சருக்குத் தெரியுமா ?

My Image Description

அதாவது , கொலைகள் அதிகரித்துவருவதை தடுத்து நிறுத்துவதற்கு சட்டத்துக்குப் புறம்பான இவ்வாறான கொலைகள் ஒரு தீர்வாக மாட்டாது என்றும், அரசாங்கம் சட்டத்தின் ஆட்சிக்கு கட்டுப்பட்டு நடந்தால் மட்டுமே இவ்வாறான பாரிய குற்றச்செயல்களை முடிவுக்கு கொண்டு வரலாம் என்றும் இலங்கை சட்ட மன்றம் ,பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு வலியுறுத்திக் கூறியுள்ளது.இந்த விடயத்தில் பாரபட்சமற்ற விசாரணையை உடனடியாக மேற்கொள்ளுமாறும் இலங்கை சட்டமன்றம் பதில் பொலிஸ் மாஅதிபரைக் கேட்டுள்ளது.உயர்நீதிமன்றத்தில் 2023 ஆம் ஆண்டு ,கைது செய்யப்படுபவர்களின் விடயத்தில் பொலிசார் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தல்களை வழங்கி உத்தரவிட்டிருந்தது.
உயர் நீதிமன்றத்தின் அந்த ஆணை ஏன் பின்பற்றப்படுவதில்லை?

எவ்வளவு பாரதூரமான குற்றச் செயலைப் புரிந்தாலும், கண்டபடி இவ்வாறு எவரையும் சுட்டுக் கொல்ல முடியாது .தப்பியோட முற்படுபவரைச் சுட்டுவிட்டு, அல்லது பதுக்கி வைத்திருக்கும் போதை பொருளை காட்டுவதற்கு அல்லது ஒளித்து வைத்திருக்கும் ஆயுதத்தை கண்டுபிடிப்பதற்கு என்று கூட்டிக்கொண்டு போய், பின்னர் தங்களிடம் இருந்த ஆயுதத்தை பறிக்க முற்பட்டார் எனக் கூறி இவ்வாறு சுட்டுத் தள்ள முடியாது.

நீதியின் ஆதிபத்தியத்திற்கு பாரிய சவால் ஏற்பட்டிருப்பதை நினைவூட்டுகின்றேன் .நேற்று பிரதமர் இந்த சபையில் பேசும் பொழுது பாதாள உலகத்தினரை ஒழித்து கட்டி விடலாம் என்று கூறினார் . பாதாள உலகத்தினரின் கரங்களில் உள்ள ஆயுதங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதாவது இவர்களுக்குச் தெரியுமா?

எத்தனையோ குழுக்கள் வன்செயல்களில் ஈடுபட்டன. அரசாங்கத்தில் இருப்பவர்களும் ஒரு காலத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் தான். தேசப்பற்றாளர்களின் மக்கள் இயக்கம் என்று கூறிக்கொண்டு ஆயுதங்களை முன்னர் பறித்தெடுத்தவர்கள் இருக்கிறார்கள் ; ஆயுதக் களஞ்சியங்களில் ஆயுதங்களை கொள்ளையடித்தவர்கள் இருக்கிறார்கள் .சட்ட பூர்வமான ஆயுதங்களை விட,சட்ட விரோத ஆயுதங்களைக் கொண்டே படுகொலைச் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன .அவற்றை கண்டுபிடித்து செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுங்கள் என்றார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!