அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற பிறகு சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். அவர்கள் கைது செய்யப்பட்டு கைவிலங்குடன் விமானங்கள் மூலம் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில் வசித்து வந்த பல இந்தியர்களும் நாடு கடத்தப்பட்டனர்.அமெரிக்காவில் அந்நியர் பிரிவு சட்டம் 1940 அமலில் உள்ளது. இந்த சட்டத்தின் படி 30 நாட்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்கி இருக்கும் 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் முறைப்படி பதிவு செய்யவேண்டும். நீண்ட நாட்களாக இந்த சட்டம் பெயர்அளவில் தான் இருந்தது. ஆனால் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்தார்.
இந்த சட்டம் கடந்த 11-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக இருக்கும் வெளிநாட்டவர்கள் 30 நாட்களுக்குள் தாமாக வெளியேற வேண்டும் என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல தங்கி இருக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் உடனடியாக தங்களை பற்றிய விவரங்களை உடனே உள்துறை பாதுகாப்பு அரசு அலுவலங்களில் பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது அபராதம், சிறை தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்.நீங்கள் தாமாக வெளியேறினால் பாதுகாப்பானது. நீங்கள் விரும்பும் விமானத்தில் பயணம் செய்ய சலுகை கிடைக்கும். நீங்களாகவே வெளியேறும் பட்சத்தில் அமெரிக்காவில் சம்பாதித்த பணத்தை நீங்களே வைத்துக்கொள்ள முடியும். நாங்களாகவே வெளியேற்றாமல் நீங்களே வெளியேறினால் எதிர்காலத்தில் சட்டப்படி அமெரிக்காவுக்கு வர முடியம். இல்லாவிட்டால் அமெரிக்காவுக்கு வர நிரந்தரமாக தடை விதிக்கப்படும்.
இந்த முடிவு அமெரிக்காவில் எச்.1-பி மாணவர் விசா பெற்றவர்களை நேரடியாக பாதிக்காது. எச்-1 பி. விசாவில் உள்ள ஒருவர் வேலையை இழந்து இருந்தால் அவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.அமெரிக்க அரசின் இந்த அதிரடி உத்தரவு வெளிநாட்டவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.முன்னதாக அமெரிக்க குடியேறிகள், எச்-1பி விசாவில் பணியாற்றுபவர்கள், கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் தங்கள் சட்டப்பூர்வ அந்தஸ்துக்கான ஆதாரத்தை எப்போதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.