போர்க் காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை தெற்கின் பாதாள உலக உறுப்பினர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு வாடகைக்கு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை 90 நாட்கள் காவலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன அனுமதி வழங்கினார்.ஜூலை 21 ஆம் திகதியன்று கிரிபத்கொடை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபரால் வெளிப்படுத்தப்பட்ட தகவலின் அடிப்படையில், டி56 ரக தாக்குதல் துப்பாக்கி, 30 தோட்டாக்களுடன் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
டி-56 ரக துப்பாக்கியை வவுனியாவிலிருந்து கொழும்பு பகுதிக்கு கொண்டு சென்று, குற்றத்தைச் செய்வற்காக, அதனை மூன்றாம் தரப்பினரிடம் ஒப்படைத்து, பின்னர் அதை வவுனியாவிற்கு திருப்பி அனுப்பும் திட்டங்கள், தமது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.விசாரணையின் போது பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், வவுனியா குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு, முக்கிய சந்தேக நபருடன் நெருங்கிய தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்தது.
அவர்கள் செட்டிகுளம் காவல் பிரிவுக்குட்பட்ட நேரியகுளம் பகுதியில் கைது செய்யப்பட்டனர்.சந்தேக நபர்களின் வீடு மற்றும் தோட்டத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்ததாக விசாரணையாளர்கள் நீதிமன்றில் தெரிவித்தனர்.இந்தநிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்து ஆயுதங்கள் தெற்கில் குற்றங்களைச் செய்வதற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்தனவா அல்லது பணத்திற்காக பாதாள உலகக்குழு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு வாடகைக்கு விடப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக, காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.