Home » திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மகளை போலீசார் கண்முன் சுட்டுக்கொன்ற தந்தை

திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மகளை போலீசார் கண்முன் சுட்டுக்கொன்ற தந்தை

by newsteam
0 comments
திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மகளை போலீசார் கண்முன் சுட்டுக்கொன்ற தந்தை

குவாலியர்,மத்திய பிரதேசத்தில், வீட்டில் ஏற்பாடு செய்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மகளை, பஞ்சாயத்தார் மற்றும் போலீசார் முன்னிலையில் சுட்டுக்கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.மத்திய பிரதேசத்தின் குவாலியரைச் சேர்ந்தவர் தனு குர்ஜார், 20. இவர், உத்தர பிரதேசத்தின் ஆக்ராவைச் சேர்ந்த விக்கி என்பவரை கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தனுவின் குடும்பத்தினர், அவருக்கு வேறொரு நபருடன் நாளை மறுநாள் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

இதற்கான அழைப்பிதழ்கள் உறவினர்களுக்கு வினியோகிக்கப்பட்ட நிலையில், இந்த திருமணத்துக்கு தனு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டார்.அதில், ‘நான் விக்கியை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். என் குடும்பத்தினர் ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டனர், ஆனால், பின்னர் மறுத்து விட்டனர்.அவர்கள் என்னை தினமும் அடித்துக் கொலை செய்வதாக மிரட்டுகிறார்கள். எனக்கு ஏதாவது நடந்தால், என் தந்தை மகேஷ் மற்றும் குடும்பத்தினர்தான் பொறுப்பு’ என, தெரிவித்திருந்தார்.இதையடுத்து, குவாலியர் எஸ்.பி. தர்மவீர் சிங் தலைமையிலான போலீசார், மகேஷ் வீட்டிற்கு நேற்று முன்தினம் மாலை விரைந்தனர்.அருகில் உள்ள கோவிலில் தந்தை மகேஷ், மகள் தனு மற்றும் குடும்பத்தாருடன், உள்ளூர் பஞ்சாயத்தார் முன்னிலையில், இரவு 9:00 மணிக்கு போலீசார் பேச்சு நடத்தினர்.அப்போது, ‘எனக்கு வீட்டில் இருக்கவே பயமாக இருக்கிறது.’உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், இங்கிருந்து என்னை அழைத்துச் சென்று அரசு காப்பகத்தில் விட்டுவிடுங்கள்’ என, தனு போலீசாரிடம் கெஞ்சியதாகக் கூறப்படுகிறது.

இந்த சூழலில், மகளிடம் பேசி திருமணத்துக்கு சம்மதிக்க வைப்பதாக மகேஷ் கூறினார். இதையடுத்து, தனுவிடம் பேசிக்கொண்டு இருந்த அவர், திடீரென மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்து மகளை சுட்டார்.அப்போது, அருகிலிருந்த உறவினர் ராகுலும், தன்னிடம் இருந்த துப்பாக்கியால் தனுவை சரமாரியாக சுட்டார்.தலை, கழுத்து, கண், நெற்றி உள்ளிட்ட இடங்களில் காயமடைந்த தனு சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அங்கு கூடியிருந்தவர்களை நோக்கியும் துப்பாக்கியல் சுட இருவரும் முயற்சித்தனர். போலீசார் துரிதமாக செயல்பட்டு மகேஷை மடக்கிப் பிடித்தனர்.இருப்பினும், ராகுல் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார் மகேஷை கைது செய்து, அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!