தேர்தல் பிரச்சாரத்திற்காக தனது பெயரும் புகைப்படமும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் மூலம் அறியப்படுத்தியுள்ளார்.
அத்தனகல்ல பிரதேச சபைப் பகுதியில் நாற்காலி சின்னத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் சில வேட்பாளர்கள், அந்த பகுதி முழுவதும் தமது மற்றும் முன்னாள் அமைச்சர்களான லசந்த அழகியண்ண, சரண குணவர்தன ஆகியோரின் புகைப்படங்களுடன் கூடிய துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாக சென்று விநியோகிப்பதாகவும் சுவரொட்டிகளை ஒட்டியிருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய துண்டுப்பிரசுரத்தை விநியோகிக்க அல்லது சுவரொட்டிகளை அச்சிட தனது புகைப்படத்தைப் பயன்படுத்த எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று தேர்தல் ஆணையாளரிடம் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தனகல்ல மற்றும் பிற பகுதிகளில் நாற்காலி சின்னத்தின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்கள் எந்தவொரு விளம்பர நோக்கங்களுக்காகவும் தனது புகைப்படத்தைப் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதாகவும், இருந்த போதிலும், சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் அனுமதியின்றி தனது புகைப்படத்தைப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.தனது புகைப்படத்தைப் பயன்படுத்தி தாம் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக கூறுவது தேர்தல் சட்டத்தை மீறுவதாக இருப்பதால், இதனை தடுக்க சம்பந்தப்பட்ட கட்சியின் பிரதானிகளுக்கு உடனடியாகத் அறிவிக்குமாறும், அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் முன்னாள் ஜனாதிபதி தேர்தல் ஆணையாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.