கர்நாடக மாநிலம் சாஸ்திரிநகர் பகுதியை சேர்ந்தவர் பத்மினி ராணி(வயது 59). இவரது கணவர் மகேஸ்வர் ராவ் கடந்த 2020-ம் ஆண்டு உயிரிழந்த நிலையில், தனது ஒரே மகள் சாஹிதி சிவபிரியாவை(வயது 17) மிகுந்த பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார்.இந்த நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றதாக தனது தாயிடம் சாஹிதி கூறியுள்ளார். ஆனால், அதன் பின்னர் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்துவிட்டதாக கூறிய சாஹிதி, அதற்கு தனது தாய்தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.பின்னர் இது குறித்து சாஹிதியின் தோழியிடம் பத்மினி ராணி விசாரித்தபோது, தனது மகள் மொத்தம் 4 பாடங்களில் தோல்வி அடைந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பத்மினி ராணி, தனது மகளிடம் இது பற்றி கேட்டுள்ளார்.அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பத்மினி ராணி, சமையல் கத்தியால் தனது மகள் சாஹிதியை குத்தி கொலை செய்துள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் 29-ந்தேதி நடந்த இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பத்மினி ராணியை கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, தனது மகள் சாஹிதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றதால் விரைவில் வெளிநாட்டிற்கு செல்ல உள்ளார் என்று உறவினர்களிடம் கூறியிருந்ததாகவும், ஆனால் உண்மை தெரியவந்தபோது ஏற்பட்ட அவமானத்தை தாங்க முடியாமல் மகளை கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, பத்மினி ராணியை குற்றவாளி என அறிவித்தது. இதையடுத்து இந்த வழக்கில் பத்மினி ராணிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.