விரார் பகுதியை சேர்ந்தவர் அம்பிகா (வயது24). நிறைமாத கர்ப்பிணியான அவர் கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை 1 மணியளவில் மின்சார ரெயிலில் வந்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவர் வலியால் துடித்தார். மேலும் பெண்ணின் வயிற்றில் இருந்து குழந்தை வெளியே வரும் நிலையில் இருந்தது.இதை அருகில் இருந்த பெட்டியில் பயணம் செய்த கேமராமேன் விகாஸ் பேட்ரே (27) கவனித்தார். ராம் மந்திர் ரெயில் நிலையம் அருகே சென்றபோது வாலிபர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். இதனால் ரெயில் அந்த ரெயில் நிலையத்தில் நின்றது. இதையடுத்து வாலிபர் அந்த பெண்ணை உடன் வந்த அவரது குடும்ப உறுப்பினர்கள் உதவியுடன் பிளாட்பாரத்தில் இறக்கினார்.மேலும் அவர் நேரத்தை வீணடிக்காமல் தனக்கு தெரிந்த பெண் டாக்டருக்கு போன் செய்தார். நிலைமையை புரிந்து கொண்ட டாக்டர் வீடியோ கால் மூலம் பிரசவம் பார்க்க வாலிபருக்கு சொல்லி கொடுத்தார். டாக்டர் சொல்லியபடி வாலிபர் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். பிரசவத்துக்காக விரிப்பு, கத்தரிக்கோலை ஏற்பாடு செய்தார். இந்த நிலையில் பெண்ணுக்கு அழகிய குழந்தை பிறந்தது. பின்னர் தாய், சேய் இருவரும் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டனர்.பெண்ணுக்கு உதவி செய்த வாலிபர் கர்ஜத் ஜாம்கெட் பகுதியை சேர்ந்தவர் ஆவார். அவர் விமானம் மூலம் வெளியூர் செல்ல இருந்ததாகவும், எனினும் பயணத்தை ரத்து செய்துவிட்டு பெண்ணுடன் ஆஸ்பத்திரி வரை சென்று உதவி செய்தார்.
இந்த சம்பவம் குறித்து மஞ்சித் தில்லான் என்ற பயணி ஒருவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். தற்போது அந்த பதிவு வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே பெண்ணுக்கு பிரசவம் பார்க்க உதவிய வாலிபரை கர்ஜத் ஜாம்கேட் தொகுதி எம்.எல்.ஏ. ரோகித் பவார் நேரில் அழைத்து பாராட்டினார்.நண்பன் படத்தில் நடிகர் விஜய் வீடியோ கால் மூலம் டாக்டர்களிடம் பேசி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் உள்ள பெண்ணுக்கு பிரசவம் பார்ப்பார். அதேபோல மும்பையில் நிஜ சம்பவம் நடந்து இருப்பது பொதுமக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.