யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி மகஜர் யாழ் மாநகர சபை ஆணையாளரிடம் இன்றையதினம் கையளிக்கப்பட்டது.ஆலய பக்தர் ஒருவரின் தன்னார்வ முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கையில் 450ற்கும் மேற்பட்டவர்கள் கையொப்பங்களை பதிவு செய்தனர்.குறித்த கையொப்பங்கள் அடங்கிய மகஜர் யாழ் மாநகர சபை அலுவலகத்தில் வைத்து மாநகர சபை ஆணையாளர் கிருஷ்ணேந்திரனிடம் கையளிக்கப்பட்டது.இதன்போது சிவகுரு ஆதீனத்தின் தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சைவ சமய ஆர்வலர்கள் பங்கேற்றனர்.அதோடு மகஜரின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநர், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர், நல்லூர் பிரதேச செயலாளர், இந்து கலாசார திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கும் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதேவேளை வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்திற்கு மாநகர சபையில் அனுமதிகள் எதுவும் பெறப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.மேலும் குறித்த உணவகத்தை அகற்ற கோரி நேற்றையதினம் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.