Wednesday, August 13, 2025
Homeஇலங்கைநாடு முழுவதும் 4,000 சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் – அமைச்சர் ஆனந்த விஜயபால

நாடு முழுவதும் 4,000 சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் – அமைச்சர் ஆனந்த விஜயபால

மட்டக்களப்பு மாவட்டத்தில் 700 சிறுவர்கள் மற்றும் மேல் மாகாணத்தில் 2,019 சிறுவர்கள் உட்பட, நாடு முழுவதும் சுமார் 4,000 சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக பொலிஸார் கண்டறிந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (13) பழைய கச்சேரி மண்டபத்தில், அபிவிருத்திக் குழுத் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த சிறுவர்களின் தாய் அல்லது தந்தை வெளிநாடு சென்றிருப்பது, அவர்களை விட்டுவிட்டு மறுதிருமணம் செய்துகொள்வது, அல்லது போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது போன்ற காரணங்களால் மட்டக்களப்பில் 700 சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.மேல் மாகாணத்தில் 2,019 சிறுவர்களும், இலங்கை முழுவதும் 4,000 சிறுவர்களும் இத்தகைய நிலையில் உள்ளனர். இவர்களுக்கு அன்பு, பராமரிப்பு, ஆதரவு வழங்குவதற்கும், அவர்களின் கல்வி தொடர்வதை உறுதி செய்வதற்கும் பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.ஆரையம்பதி பிரதேசத்தில் புதிய பொலிஸ் நிலையம் ஒன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. தற்போது மாவட்டத்தில் 600 பொலிஸார் கடமையாற்ற வேண்டிய நிலையில், 300 பொலிஸார் மட்டுமே உள்ளனர். இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய, மேலும் 50 பொலிஸார் மாவட்டத்துக்கு வழங்கப்படுவர்.

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் மதுபான விற்பனையைத் தடுக்க, விசேட அதிரடிப்படையுடன் இணைந்து பொலிஸார் ஒவ்வொரு பொலிஸ் நிலையப் பிரிவிலும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு, இத்தகைய சட்டவிரோத செயல்களை முற்றாக ஒழிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக, பிரதேச சபைத் தலைவர்கள் நீண்ட கலந்துரையாடலை நடத்தி தமது கவலைகளை முன்வைத்தனர். இதற்கமைய, புவியியல் சுரங்கப் பணியகம் ஒவ்வொரு நபருக்கும் வழங்கப்படும் உரிமம் தொடர்பான விபரங்களை, பொலிஸார், பிரதேச செயலாளர் அல்லது பிரதேச சபையினர் கோரும் பட்சத்தில் உடனடியாக வழங்க வேண்டும்.

இதுவரை வழங்கப்பட்ட மணல் அகழ்வு அனுமதிப் பத்திரங்கள் தொடர்பான விபரங்கள் உடனடியாக அரசாங்க அதிபருக்கும் அபிவிருத்திக் குழுத் தலைவருக்கும் வழங்கப்பட வேண்டும். சட்டவிரோத மணல் அகழ்வு வாகனங்களை நிறுத்தி, தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கவும், சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.இந்தக் கூட்டத்தில் அரசாங்க அதிபர் ஜே.ஜே. முரளிதரன், பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், வைத்தியர் சிறிநாத், இரா. சாணக்கியன், ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி வர்ண ஜெயசுந்தர, மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மென்டிஸ், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன, 15 பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், மட்டு – அம்பாறை விசேட அதிரடிப்படைத் தளபதி, மட்டு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதேச சபைத் தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:  இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!