நாவலப்பிட்டி இம்புல்பிட்டி தோட்டத்தில் கைவிடப்பட்ட பங்களாவில் திருமணத்திற்கு மாறான மனைவியின் கழுத்தறுத்து கொலை செய்த நபர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார். சந்தேக நபர் கம்பளையில் சரணடைந்துள்ள நிலையில், பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக நாவலப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். நேற்று (22) மாலை இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர், நாவலப்பிட்டி இம்புல்பிட்டி தோட்டத்தைச் சேர்ந்த 39 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண், சந்தேக நபருடன் கம்பளை புஸ்ஸல்லாவ பகுதியில் சுமார் 09 மாதங்கள் வசித்து வந்த பின்னர் தனது சட்டப்பூர்வ கணவரின் வீட்டிற்குத் திரும்பிச் சென்றுள்ளார்.
வீட்டில் இருந்த குறித்த பெண், அவ்வப்போது சந்தேக நபருக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு, வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லத் தயாராகி வந்துள்ளார்.பொலிஸார் நடத்திய விசாரணைகளில் சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.கொலை செய்யப்பட்ட பெண் வெளிநாடு செல்வதற்காக கிராம சேவகர் சான்றிதழ் பெறச் சென்றபோது, சந்தேக நபர் அவரை தொலைபேசியில் அழைத்து பாழடைந்த வீட்டிற்கு வருமாறு அழைத்த நிலையில், அங்கு சென்ற பெண்ணின் கழுத்தை அறுத்து சந்தேகநபர் கொலை செய்துள்ளார்.இறந்த பெண்ணின் உடல், பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.