மாணவிகள் கர்ப்பமானால் ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதாக ரஷிய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் பத்து மாகாணங்களில் இந்த புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்படுகிறது.ரஷியாவின் மக்கள்தொகையில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாகாணங்களின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக கர்ப்பிணிப் பெண்களுக்கு பணம் வழங்கும் திட்டத்தை ரஷியா தொடங்கியிருந்தது. இருப்பினும், இந்த திட்டத்தால் பெரியவர்கள் மட்டுமே பயனடைந்தனர். இது இப்போது பள்ளி மாணவிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.ரஷியாவில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 2023 ஆம் ஆண்டில் ஒரு பெண்ணுக்கு 1.41 ஆக உள்ளது. இது முன்பு 2.05 ஆக இருந்தது. இதற்கிடையில், டீனேஜ் கர்ப்பம் குறித்த கணக்கெடுப்பின் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த கணக்கெடுப்பை ரஷிய பொது கருத்து ஆராய்ச்சி மையம் நடத்தியது.
இதில், 43 சதவீதம் பேர் ரஷியாவின் புதிய கொள்கையை ஆதரித்தனர், 40 சதவீதம் பேர் எதிர்த்தனர்.இதற்கிடையே உக்ரைனுடனான போரில் சுமார் 250,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இளம் ரஷியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது நெருக்கடியை தீவிரப்படுத்துகிறது.ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்டது போல, பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கவும் ரஷியா திட்டமிட்டுள்ளது. கருக்கலைப்புக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் ரஷியா தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.இதற்கிடையில், 2050 ஆம் ஆண்டுக்குள் உலகின் 75 சதவீத நாடுகள் மக்கள் தொகை நெருக்கடியை எதிர்கொள்ளும் என்று கூறப்படுகிறது.