முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – மந்துவில் பகுதியில், விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் பதுங்கு குழி ஒன்று நீதவானினால் பார்வையிடப்பட்டுள்ளது.விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் இங்கு பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, புதுக்குடியிருப்பு காவல்துறையினரால், நீதிமன்றத்திற்குச் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன அதற்கமைய, குறித்த பதுங்கு குழியை அகழ்வு செய்வதற்கு முன்பாக, நீதவான் நேற்றைய தினம், குறித்த இடத்திற்குச் சென்று, கள ஆய்வில் ஈடுபட்டார். நீதவானின் ஆலோசனைக்கமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.இதேவேளை, புதுக்குடியிருப்பு காவல்துறையினர் , கிளிநொச்சி குண்டு செயலிழக்கும் பிரிவினர், விசேட அதிரடிப் படையினர், தடயவியல் அதிகாரிகள் இணைந்து பதுங்கு குழியினுள் இருக்கும் நீரினை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.