(எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி)
இலங்கை அரசியலில் இன்றைய பேசுபொருளாக இரு சிறுபான்மை இனங்களின் மனிதப்புதைகுழிகள் காணப்படுகின்றன.
தமிழ் மக்கள் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான நியாயத்தைக்கோரி தொடர்ந்த ஆர்ப்பாட்டங்கள், ஏனைய நகர்வுகளால் தற்போது அவை தோண்டப்படுகின்றது.
அதேநேரம், 1990ல் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டு ஊர் திரும்பிய காத்தான்குடியைச்சேர்ந்த ஆண், பெண், சிறுவர்கள் உள்ளடங்களாக சுமார் 60-160 பேர் வரையான முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் கடத்திக்கொலை செய்து குருக்கள்மடத்தில் புதைக்கப்பட்ட புதைகுழிகளைத் தோண்டியெடுத்து அவர்களுக்கான நியாயம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையாகும்.
எவ்வாறு செம்மணிக்கான தீர்வைப்பெற உழைத்து தற்போதைய சூழ்நிலையில் அதனை சாத்தியப்படுத்திக் கொள்ள தமிழ் சமூகம் முயற்சிக்கிறதோ, அதேபோன்று, இச்சூழ்நிலையைப்பயன்படுத்தி தங்களுக்கான நியாயங்களை முஸ்லிம் சமூகம் பெற முயற்சிப்பதில் எவ்விதத்தவறுமில்லை.
கடந்த 2010ல் மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தவணை ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் ஐநா மனித உரிமைப்பேரவையில் இலங்கை தொடர்பான தொடரான அழுத்தங்களைச்சமாளிக்கும் நோக்கில் காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டது.
இவ்வாணைக்குழு அமைக்கும் பின்னணியில் அன்றைய நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் முக்கிய பங்கிருந்தது என்பது நினைவூட்டத்தக்கது.
இவ்வாணைக்குழு அமைக்கப்பட்ட காலப்பகுதியில் இவ்வாய்ப்பினை சாதகமாக பயன்படுத்தி குருக்கள்மடத்தில் புலிகளால் கொன்று புதைக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்களும் தோண்டியெடுக்கப்பட வேண்டுமென்ற விடயத்தில் காத்தான்குடியைச்சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாருக் கடுமையான பிரயேத்தனங்களை அக்காலப்பகுதியில் மேற்கொண்டிருந்தார்.
கடத்திக்கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்களின் உறவினர்களினூடாக முறைப்பாட்டைப்பதிவு செய்து, களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தினூடாக புதைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இடத்தைத்தோண்டுவதற்கான அனுமதியையும் பெற்றுக்கொண்டனர்.
ஆனால், குறித்த புதைகுழிகள் தோண்டுவதை அன்றைய ஆட்சியாளர்கள் விரும்பவில்லை. ஏனெனில், மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில், அவரின் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித்தலைவராகவும் பிரதியமைச்சராகவும் இருந்த விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) இக்கொலை இடம்பெற்ற காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கிழக்குத்தளபதியாக செயற்பட்டிருந்தார்.
அன்று இவை தோண்டியெடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் கருணாவை சாட்சியாளராகப் பெயரிட வேண்டிய சூழ்நிலை வரும். இதை கருணாவும் விரும்பவில்லை,
ஜனாதிபதியும் சிங்கள மக்கள் மத்தியில் தனது கட்சிக்கு அவப்பெயர் வருவதை விரும்பவில்லை.
அதேநேரம், இக்காலகட்டத்தில் குருக்கள்மடத்திலுள்ள புலிகளால் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி ஆண், பெண், சிறுவர்களின் உடல்கள் வெளிவருவது சர்வதேச ரீதியாக விடுதலைப்புலிகள் கொடூரமானவர்கள், சிறுவர்களைக்கூட விட்டுவைக்காதவர்கள் என்ற அவப்பெயர் வருவதை புலம்பெயர் தமிழர் தரப்பும் விரும்பவில்லை.
அதே போன்று, கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக சிவநேசனத்துறை சந்திரக்காந்தன் (பிள்ளையான்) உட்பட விடுதலைப்புலிகளின் அன்றைய முக்கியஸ்தர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாதுகாக்கும் கடப்பாட்டுடன் இருந்ததால், குறித்த புதைகுழி தோண்டப்படுவதில் அவருக்கு விருப்பமிருக்கவில்லை.
தற்போது சொல்லப்படுவது போல் குருக்கள்மடத்தில் இருக்கும் புதைகுழியைத்தோண்டுவதற்கு நீதியமைச்சு நிதி கொடுக்கவில்லை. அதனால் தான் தோண்டப்படவில்லை. நீதியமைச்சராக ரவூப் ஹக்கீம் இருந்தும் எதுவும் செய்யவில்லை என உண்மைக்குப் புறம்பான அரசியல் காழ்புணர்வு கொண்ட ஒரு சிலர் விமர்சிப்பது போன்று நிதி இவ்விடயத்திற்கு தடையாக இருக்கவில்லை. குறித்த அகழ்வுப்பணிகளுக்கு நிதி தேவைப்பட்டாலும் அதனை நிறுவன ரீதியாக சேகரித்துக் கொள்ளும் வழிமுறைகள் தாராளமாக இருந்தது. அதனை அக்காலப்பகுதியில் மாகாண சபை உறுப்பினராக இருந்த இம்மனிதப் புதைகுழியைத் தோண்ட வேண்டுமென்று பிரயத்தனங்களை எடுத்த ஷிப்லி பாறுக் பல்வேறு ஊடக அறிக்கைகளில் உறுதிப்படுத்தி இருந்தார். அதற்கான முழு நிதியையும் வழங்குவதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்( ICRC) முன்வந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அன்று ரவூப் ஹக்கீம் தானே நீதியமைச்சர்? ஆம், அன்று ரவூப் ஹக்கீம் தான் நீதியமைச்சர், அவர் எவ்வாறான சூழ்நிலையில் அன்று மஹிந்த அரசாங்கத்தோடு இணைந்து கொண்டார் என்பது இன்று சிலருக்கு தெரியாவிட்டாலும், இவ்விவகாரம் பலரும் அறிந்த
விடயம். முஸ்லிம் காங்கிரஸை முழுமையாக உடைக்கும் அரசாங்கத்தின் சதியிலிருந்து கட்சியைப்பாதுகாப்பதற்கு அரசாங்கத்தோடு இணைந்து கொண்டார்.
அன்று யுத்த வெற்றியைக்காரணங்காட்டி ஆட்சிபீடமேறிய அரசாங்கம் நினைத்ததைச்செய்யும் அதிகாரங்களோடு இருந்ததால் அதன் ஆபத்துகளை முடியுமானளவு தவிர்த்துக்கொள்ளும் நோக்கில் இணைந்து கொண்டார்.
அன்றைய ஆட்சியில் றிசாட்,அதாவுள்ளாஹ் போன்ற சில முஸ்லிம் தலைவர்கள் ஆட்சியாளர்களின் செல்லப்பிள்ளைகளாக இருந்ததன் காரணத்தினால் அரச தலைவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை மாற்றாந்தாய் பிள்ளை மனப்பாங்கிலேயே பார்த்தார்கள்.
நீதியமைச்சைக்கொடுத்தார்கள். அதனைச் செயற்படுத்துவதற்கு போதிய நிதிகளை ஒதுக்கிக் கொடுக்கவில்லை. அபிவிருத்திகளுக்கும் நிதிகளை ஒதுக்கிக்கொடுக்கவில்லை. அந்த ஆட்சியில் இணைந்ததை ரவூப் ஹக்கீம் இப்படிச்சொன்னார், “கண்ணைத்திறந்து கொண்டு குழியில் விழுந்து விட்டேன்” என்று.
அதேநேரம், அந்த ஆட்சியில் இனவாதிகளால் முஸ்லிம் சமூகம் பல நெருக்கடிகள், இழப்புக்களைச்சந்தித்த நேரம், அவ்வாறான நேரங்களில் ரவூப் ஹக்கீம் ஆளுங்கட்சிக்குள் ஒரு எதிர்க்கட்சியாகச் செயற்பட்டு அரசின் போக்கைக்கடுமையாக விமர்சித்ததையும், கண்டித்ததையும் பாராளுமன்றத்தில் உரத்து குரல் எழுப்பியதையும் மறக்க முடியாது.
சர்வதேசப்பரப்பில் அன்றைய ஆட்சி எப்படி இருக்கிறது என்பதையும், முஸ்லிம் விரோதப்போக்குகளை விளக்கும் நோக்கோடு ரவூப் ஹக்கீம் “நீதியில்லாத நாட்டில் தான் நீதியமைச்சர்” என்று வெளிப்படையாகக்கூறியது ஆட்சியாளரின் போக்கை தெட்டத்தெளிவாக விளக்கியது.
இவைகள் சர்வதேச மட்டத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை ஏற்படுத்தியது. முஸ்லிம் விரோதப்போக்கிற்கெதிராக தன்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுத்து முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பிற்காகச்செயற்பட்டார் என்பது இன்றைய தேசிய மக்கள் சக்தி பிரதியமைச்சர் முனீர் முளப்பர், பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லம் போன்றவர்களுக்கு தெரியவாய்ப்பில்லை.
அதனால் தான் ரவூப் ஹக்கீம் இந்த அரசாங்கத்தின் கவனத்திற்கு மக்களின் நியாயமான பிரச்சினைகளை கொண்டு சென்றால் அதற்குப்பதில் வழங்காது அரசாங்கம் இவ்வாறானவர்களைக் கொண்டு ரவூப் ஹக்கீமுக்கு சேறுபூச முனைகின்றது.
குருக்கள்மடத்தில் விடுதலைப்புலிகளால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத்தோண்டும் வழக்கு 2014ல் களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது.
இந்தாண்டு மஹிந்த ஆட்சியின் இறுதிப்பகுதியாகும். நீதிமன்றம் தோண்டுவதற்கு அனுமதி கொடுத்து அவை தோண்டுவதற்கான சட்டவைத்திய நிபுணர்களும் குறித்த இடத்திற்கு வந்த போது, குறித்த இடத்தை அடையாளப்படுத்துவதில் ஷிப்லி பாறுக் மற்றும் நகர சபை உறுப்பினர் றவூப் ஏ மஜீத் ஆகியோருக்கிடையில் இடத்தை அடையாளப்படுத்துவதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவை நிறுத்தப்பட்டு, உரிய இடத்தை அடையாளப்படுத்தாமல் பரவலாகத்தோண்ட முடியாது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. இதற்குப்பின்னால் வேறு அஜந்தாக்களோடு சிலர் செயற்பட்டார்களா? என்ற ஐயமும் வெளிப்படுத்தப்படுகிறது.
இந்த விடயத்தில் ஆரம்பம் முதல் முழுமையாக தன்னை ஈடுபடுத்திய ஷிப்லி பாறுக்கினால் பிரதேச மக்களின் கருத்துக்களை பெற்று ஊர்ஜிதமாக புதைகுழி அடையாளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும்,றவூப் ஹாஜியாரால் வேறு இடம் அடையாளப்படுத்தப்பட முரண்பாடு ஏற்பட்டது. சட்டவைத்திய அதிகாரிகளால் தெளிவாக இடத்தை அடையாளப்படுத்துமாறு கூறப்பட்டு, அவர்கள் திரும்பிச்சென்ற நிலையில், குறித்த வழக்கு சட்டமாஅதிபரின் ஆலோசனையின் பேரில் கிடப்பில் போடப்பட்டது.
அன்று குறித்த இவ்வழக்கு களுவாஞ்சிக்குடி நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட போது முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஷிப்லி பாருக்கின் சார்பாக ஆர்வமாக இவ்வழக்கில் தோன்றி தன்னாலான ஒத்துழைப்புகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவை இவ்வாறிருக்க, கடந்த 09.07.2025 பாராளுமன்ற அமர்வில் செம்மணி விவகாரத்தில் அரசாங்கத்தின் போக்கு, அதேபோன்று சிங்கள சகோதரர்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகள் மற்றும் குருக்கள்மடத்தில் புனித ஹஜ்ஜை நிறைவேற்றி விட்டு வந்தவர்களை புலிகள் கொன்று புதைத்த குருக்கள்மடத்திலிருக்கும் புதைகுழிகளும் தோண்டப்பட வேண்டுமென்பதை நியாயபூர்வமாக ரவூப் ஹக்கீம் நீதியமைச்சருக்கு காட்டமாக எடுத்துரைத்தார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தை அமைத்து அதனூடாக அரசியல் காரணங்களுக்காக கிடப்பில் போடப்பட்ட இவ்வாறான விடயங்களைத்தோண்டி எடுக்கப்பட்டு அரசியல் தலையீடின்றி உண்மை வெளிப்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்கான பங்களிப்பை ரவூப் ஹக்கீம் வழங்கினார்.
குறித்த அலுவலகம் 2016ல் ஆரம்பிக்கப்பட்டு, 2017ல் நடுப்பகுதியில் நடைமுறைக்கு வந்தது. அதன் விளைவாகவே இவ்விவகாரங்கள் இன்று கவனஞ்செலுத்தப்படுகின்றன.
மேலும், குறித்த அலுவலகத்தின் செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுத்து இவ்வாறான பிரச்சினைக்குத்தீர்வை வழங்குமாறே பாராளுமன்றத்தில் நீதியமைச்சரை ரவூப் ஹக்கீம் கோரியிருந்தார்.
இதன் பின்னர் தேசிய அரசியலிலும், சர்வதேச ரீதியாகவும் குருக்கள்மடம் பேசுபொருளாக மாற்றப்பட்டு பலரும் அவை தொடர்பாக அவதானஞ்செலுத்துகின்றனர்.
இதன் விளைவாக கிடப்பில் போடப்பட்ட வழக்கு நகர்த்தல் பத்திரத்தினூடாக மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
செம்மணி மனிதப்புதைகுழி போன்று குருக்கள்மட மனிதப்புதைகுழியும் தோண்டப்பட்டு உண்மை வெளிச்சத்திற்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வவகாரம் தற்போது சூடுபிடித்து பேசுபொருளாக மாறியது ரவூப் ஹக்கீமின் பாராளுமன்ற உரை என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இதனைத்தாங்கிக்கொள்ள முடியாத தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் உட்பட எதிரணியினர் உண்மையை மறைத்து, தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பதோடு, நீதியமைச்சு தோண்ட நிதி கொடுக்கவில்லை என நடக்காத விடயத்தை கற்பனை செய்து, போலியாக புனைந்து, தவறான செய்தியினை வதந்தியாக பரவவிட்டு, அப்பாவி மக்களைக்குழப்பும் மோசமான செயலைச் செய்திருக்கிறார்கள் என்பது மேற்சொன்ன விடயங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ரவூப் ஹக்கீம் ஒரு கட்சித்தலைவராக, முப்பது வருட பாராளுமன்ற அனுபவத்தைக்கொண்ட மூத்த அரசியல் தலைவருக்கு எந்த விடயத்தை, எந்த காலப்பகுதியில் பேசுவது பொருத்தமென்பது தெரியும், இதனையே காலம் அறிந்து பயிரிடல் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
எனவே, ரவூப் ஹக்கீமுக்கு அரசியல் படிப்பிக்க கத்துக்குட்டிகளும்,மூடர்களும் முனையக்கூடாது. இன்று பொருத்தமான நேரத்தில், பொருத்தமான சந்தர்ப்பத்தில் ரவூப் ஹக்கீம் குறித்த விடயத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என சகோதர இன சமூக ஆர்வாளர்கள் அதன் நியாயங்களை முன்வைத்து ரவூப் ஹக்கீமின் செயலை பொதுத்தளங்களில் ஆதரித்துப்பேசும் போது, போதுமான அரசியல் அறிவில்லாதவர்கள் விமர்சனம் எனும் போர்வையில் காழ்ப்புணர்வோடு இவ்விடயத்தை விமர்சிப்பதை மக்கள் உணர்வார்கள்.
ரவூப் ஹக்கீம் அன்று பாராளுமன்றத்தில் இதனைப்பேசாவிட்டால் யார் பேசியிருப்பர்? என்ற கேள்வியை ஒவ்வொருவரும் கேட்டுப்பார்தால் உண்மை புரியும். இன்னும் இவ்விவகாரம் கிடப்பில்தான் இருந்திருக்கும்.
ரவூப் ஹக்கீம் பேசிய பின்னர் தான் அது பேசுபொருளாக இன்று பலரும் பேசுவதற்கு காரணமாகி, மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வைக் கொடுத்திருக்கிறது என்பது நிதர்சன உண்மையாகும்.
விமர்சனம் என்ற பேரில் நல்லவைகளுக்கு ஒத்துழைத்து சமூகத்திற்கு நலவு ஏற்படுவதை தங்களது வங்குரோத்து அரசியலுக்காக விமர்சித்து தடுக்கப்பார்க்கும் இத்தகையவர்கள் தான் முஸ்லிம் சமூகத்தின் கேடுகள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இவ்வாறானவர்களை முஸ்லிம் சமூகம் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும்.
ஏற்கனவே ஷிப்லி பாறுக் மற்றும் றவூப் ஏ மஜீத் (றவூப் ஹாஜியார்) ஆகியோருக்கிடையில் இடத்தை அடையாளப்படுத்துவதில் இடம்பெற்ற முரண்பாடு காரணமாக கிடப்பில் போடப்பட்ட, அதே நேரத்தில் தற்போது றவூப் ஏ மஜீத் உடன் குரல்கள் அமைப்பின் சட்டத்தரணிகள் குழு இணைந்து இந்த விவகாரத்தில் முனைப்புக்காட்டுவது வரவேற்கக்கூடியது என்றாலும், கடந்த காலப்படிப்பினையிலிருந்து முரண்பாடில்லாமல் புதைக்கப்பட்ட இடத்தை சரியாக அடையாளப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.
எனவே, குருக்கள்மடத்திலுள்ள முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தோண்டும் விவகாரத்தில் அரசியல் தலைவர்கள், சமூகத்தலைவர்கள், சமூக அமைப்புக்கள் எல்லோரும் ஒத்துழைத்து, அன்று போன்று உரிய இடத்தை அடையாளப்படுத்துவதில் வந்த குழப்பங்கள் வருவதைத்தவிர்த்து, உரிய இடத்தை அடையாளங்கண்டு நீதி மன்றத்தில் அனுமதியோடு இவ்விவகாரங்களை முன்னெடுத்துச்செல்வதே சாலச்சிறந்தது.