Site icon Taminews|Lankanews|Breackingnews

பொகவந்தலாவில் தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமி சடலமாக மீட்பு

பொகவந்தலாவில் தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமி சடலமாக மீட்பு

பொகவந்தலாவ பொகவானை தோட்டப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் நேற்று (14) மாலை 5:45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

குறித்த சிறுமியின் வீட்டுக்கு உறவினர்கள் வந்திருந்த நிலையில், உறவினரின் குழந்தைக்காகக் கட்டப்பட்ட தொட்டிலில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, சிறுமி தொட்டிலில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக உறவினர்கள் கூறுகின்றனர்.சிறுமி தொட்டிலில் தொங்கிக் கொண்டிருந்ததை அவரது சகோதரன் அயலவர்களுக்கு தெரிவித்ததைத் தொடர்ந்து, அயலவர்கள் சிறுமியை மீட்டெடுத்து, பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், சிறுமி உயிரிழந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ஆரம்பக் கட்ட விசாரணைகளின்படி, சடலமாக மீட்கப்பட்டவர் பொகவானை தோட்டத்தைச் சேர்ந்த 13 வயது மதுமதன் ஜென்சியா என்ற சிறுமியே என்பது உறுதியாகியுள்ளது.அவர் பொகவானை தமிழ் வித்தியாலயத்தில் 7ஆம் தரத்தில் கல்வி கற்பதாகவும் தெரிகிறது.இதேவேளையில், தொட்டிலின் சாரியால் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.சம்பவம் தொடர்பாக ஹட்டன் நீதிமன்ற பதில் நீதிவான் புபூது ஜிந்தக தலைமையில் மரண விசாரணை நடத்தப்பட்டு, சிறுமியின் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேதப் பரீட்சைக்காக டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version