கிழக்கு மண்ணில் உதயமாகி, தேசியத்தில் விருட்சமாகத் திகழும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கமானது பல ஊர்களையும்,பல மனிதர்களையும் பாராளுமன்றம் பிரவேசிக்கச்செய்து கௌரவப் படுத்தியிருக்கிறது. இன்னும் பல ஊர்கள், நபர்கள் எதிர்காலத்தில் இக்கட்சியினூடாக கௌரவம் பெறவிருக்கிறார்கள்.
பொத்துவில் மண் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டை எனப்பலராலும் வர்ணிக்கப்படும் பிரதேசமாகும். 1994ம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸின் இஸ்தாபகத்தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது, அக்காலகட்டத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலொன்றை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியது.
கிழக்கைப்பொறுத்தளவில் முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக ஐக்கிய தேசியக்கட்சி என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்க்கட்சி என பெரும்பான்மை இனக்கட்சிகளோடு பயணித்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களின் தனித்துவத்தை எடுத்துச்சொல்லவும் உலகறியச்செய்யவுமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அஷ்ரப் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு எழுச்சியடைந்த காலப்பகுதியாக இக்காலப்பகுதி இருந்தது.எனவே, மர்ஹும் தலைவர் அஷ்ரப்பால் குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக்கொண்ட ஆறு உள்ளூராட்சி மன்றங்களை இலகுவாகக் கைப்பற்றக்கூடிய சூழ்நிலையில் அஷ்ரப் ஒரு சவாலை விடுத்தார்.
அதாவது, 1994ல் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சிமன்றத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்திலுள்ள சபைகளில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஆறு சபைகளில் ஒன்றையாவது கைப்பற்றத் தவறுவோமாயின், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத்துறப்பேன் என்பதாகும். தேசிய ரீதியாக இவ்விடயம் கூர்மையாகப் பார்க்கப்பட்டது.
ஆனாலும், அன்று நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆறு சபைகளில் நான்கு சபைகளையே கைப்பற்ற முடிந்தது. அதன் காரணமாக தான் விடுத்த சவாலை ஏற்றுக் கொண்டு அஷ்ரப் தனது பாராளுமன்றப்பதவியை துறந்து தனது கணவான் அரசியலை வெளிக்காட்டியதனால் தேசியளவில் வியந்து பார்க்கப்பட்டார்.
அவ்வாறு அன்று அஷ்ரப் இழந்த இரு சபைகளுள் ஒன்று பொத்துவில் பிரதேச சபையாகும். அன்றைய தேர்தலில் பொத்துவிலில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக எஸ்.எஸ்.பி அப்துல் மஜீத் செயற்பட்டதாலும், அவருக்கு தனிப்பட்ட ரீதியாக மக்கள் செல்வாக்கு இருந்ததாலும் பொத்துவில் மண்ணில் முஸ்லிம் காங்கிரஸுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் கடும் போட்டி நிலவி, இறுதியில் குறைந்த வாக்கு வித்தியாசயத்தில் சபையை இழந்தது.
முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகப்போட்டியிட்டு வெற்றி பெற்ற கிராம சேவையாளராகக் கடமையாற்றியிருந்த எம்.பீ.அப்துல் அஸீஸ் பொத்துவில் சபையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.குறித்த தேர்தல் முடிவுகளின் பின்னர் தோல்வியை ஏற்று அஷ்ரப் பதவி துறந்த நிலையில், பெரும் எழுச்சி பொத்துவில் மண்ணில் முஸ்லிம் காங்கிரஸுக்கு சில மாதங்களில் ஏற்பட்டு பொத்துவில் மண் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாக வர்ணிக்கப்பட்டது.
கட்சியின் வளர்ச்சிக்கு உந்துதலாக குறித்த பிரதேசம் காணப்பட்டது. காலப்போக்கில் தங்கள் பிரதேசமும் முஸ்லிம் காங்கிரஸால் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டு அலங்கரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் அம்மக்கள் மத்தியில் ஏற்பட்டது.குறித்த எதிர்பார்ப்பு நிறைவேறுவதற்கு முன்னரே 2000ம் ஆண்டு அஷ்ரப் திடீர் மரணத்தைத்தழுவி மக்களை சோகத்திலாழ்த்தி விட்டுச்சென்றார்.
அடுத்த தலைவர் யார் என்ற குழப்படிகள், இணைத் தலைவர் என்ற நிலையிலிருந்து தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்டார்.அதன் பின்னர், 2001ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலின் பின்னர் தமது கட்சிக்கு கிடைத்த தேசியப்பட்டியல் தொடர்பாக சிலரது பெயர்களும், எதிர்பார்ப்புகளும் வெளிப்பட்ட நிலையில் பொத்துவில் மக்களின் நியாயமான கோரிக்கைக்கு செவிசாய்த்தும் பொத்துவில் மக்கள் கட்சிக்காக செய்த தியாகங்களை நினைவுகூர்ந்தும் பொத்துவில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசியல் அதிகார ரீதியாக பாதுகாப்பை வழங்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தும் பொத்துவில் மக்கள் மீது தான் கொண்டுள்ள அன்பு மற்றும் அக்கறையை வெளிப்படுத்தும் நோக்கோடு பொத்துவில் பிரதேச சபையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக எதிர்க்கட்சித்தலைவராக இருந்த கட்சியின் முக்கியஸ்தரான எம்.பீ.அப்துல் அஸீஸை தேசியப்பட்டியலினூடாக பாராளுமன்றம் அழைத்துச் சென்றார்.
இதன் பின்னர் நீண்டகாலம் நடைபெறாதிருந்த உள்ளூராட்சித்தேர்தல் 2006ம் ஆண்டு நடைபெற்ற போது பொத்துவில் பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ் வசமானது. இதன் தவிசாளராக எம்.எஸ்.எம்.மர்சூக் நியமிக்கப்பட்டார்.அதன் பின்னர், 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத்தேர்தலிலும் முஸ்லிம் காங்கிரஸ் சபையை கைப்பற்றி எம்.எஸ்.அப்துல் வாஸீத்தை தவிசாளராக நியமித்தார்கள்.
இவர் 2006ம் ஆண்டு உள்ளூராட்சித்தேர்தலில் பொத்துவில் பிரதேசத்தில் சுயேட்சைக்குழு பூட்டு சின்னத்தில் போட்டியிட்டு பொத்துவில் பிரதேச சபைக்கு உறுப்பினராகத்தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.2018ல் நடைபெற்ற புதிய முறையிலான உள்ளூராட்சி தேர்தலிலும் முஸ்லிம் காங்கிரஸ் சபையைக் கைப்பற்றி மீண்டும் எம்.எஸ்.அப்துல் வாஸீத்தை தவிசாளராக நியமித்தது.
2020ம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸினூடாக பொத்துவிலைச் சேர்ந்த எஸ்.எம்.எம் முஷர்ரப் பாராளுமன்ற உறுப்பினராகத்தெரிவு செய்யப்பட்ட பின், முஸ்லிம் காங்கிரஸ் சவால்களை பொத்துவில் மண்ணில் எதிர்கொண்டது.
பொத்துவில் பிரதேச சபையில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வெற்றி பெற்று உறுப்பினராக இருந்த ரஹிம் என்பவரை தன்னோடு இணைந்துக்கொண்டு இரண்டு வருடங்களின் பின்னரான பொத்துவில் பிரதேச சபையின் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டார்.
பொத்துவில் மண்ணுக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்குமான உறவென்பது பலமானதாக இருந்தாலும், சில நபர்களால் பலவீனப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் நீடித்து நிலைப்பதில்லை. அதேநேரம், பொத்துவில் மண்ணுக்கு அதிகாரம் கொடுப்பதிலும் எதிரிகளை நண்பர்களாக்கி பொத்துவில் மண்ணை ஒற்றுமைப்படுத்தி அதிகாரம் கொடுத்தவராக ரவூப் ஹக்கீம் திகழ்கிறார்.
அன்று தேசியப்பட்டியலினூடாக அதிகாரம் கொடுக்கப்பட்ட அப்துல் அஸீஸ் 2004ல் கட்சி மாறிப்போனாலும் முஸ்லிம் காங்கிரஸ் பொத்துவிலை கைவிடவில்லை
அப்துல் மஜீத் எஸ்.எஸ்.பீ யை கட்சிக்குள் உள்வாங்கி கிழக்கு மாகாண சபை உறுப்பினராக்கி அழகு பார்த்தது. இப்படி மாற்றுக்கட்சிகளிலிருந்தவர்களை உள்வாங்குவதிலும் கட்சி மாறிப்போனவர்களை மீண்டும் இணைத்துக்கொள்வதிலும் பொத்துவில் மக்களின் நன்மைகருதி தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் பெருமனதுடன் செயற்பட்டு வருகின்றார்.
தான் அதிகாரத்திலிருந்த நிலையிலும், தனது கட்சியின் அதிகாரங்களைப்பயன்படுத்தியும், பொத்துவில் கட்சியின் முக்கியஸ்தர்களூடாகவும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை ரவூப் ஹக்கீம் மேற்கொண்டு வந்தார்.
இன்னும் பல முக்கிய விடயங்கள் கவனமெடுத்தும் நல்லாட்சிக்காலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் அவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. அவை தொடர்பாக தேர்தல் கால மேடைகளில் மக்களின் வாக்குகளைப்பெற வேண்டுமென்ற நோக்கத்தில் எதிர்த்தரப்பு வேட்பாளர் கடுமையாக சாடிப்பேசியதையும் நினைவூட்டிக் கொள்கின்றேன்.
அன்று ரவூப் ஹக்கீமை விமர்சித்து பொத்துவில் மண்ணிலிருந்து பாராளுமன்றம் சென்றவர் ஆளுங்கட்சியில் இணைந்து கொண்டாலும், அன்று ரவூப் ஹக்கீமை விமர்சித்த பொத்துவிலுக்கான குடிநீர், கல்வி வலயம் எனப்பல விடயங்களை தன்னாலும் நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை.
பொத்துவில் மண் அரசியலால் பிளவுபட்டு அதிகாரத்தை இழந்து தவித்த நிலையில் உள்ளூராட்சித்தேர்தலின் பின்னர் மீண்டும் ரவூப் ஹக்கீம் பொத்துவில் மண் தொடர்பில் விசேட கவனமெடுத்து பிரிந்து கிடக்கும் பொத்துவில் மண்ணை ஒற்றுமைப்படுத்தி இழந்த அரசியலதிகாரத்தை மீட்டுக்கொடுக்கும் நோக்கில் விமர்சனங்களுக்கப்பால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷர்ரபை முஸ்லிம் காங்கிரஸில் இணைத்து பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளராக்கியதோடு, முன்னாள் தவிசாளரும் முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் அமைப்பாளருமான எம்.எஸ்.அப்துல் வாஸீத்தை தனது கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப்பட்டியலினூடாக குறிப்பிட்ட காலப்பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினராக நியமித்துள்ளார்.
ஏனைய பிரதேசங்களிலும் தேசியப்பட்டியலுக்கான கோரிக்கையும் தேவையும் இருந்த போதிலும் பொத்துவில் மண்ணிண் தேவைப்பாடுகளை நிறைவைற்றிக்கொடுக்கும் நோக்கில் இவ்வாறான அதிகாரங்கள் ரவூப் ஹக்கீமால் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
பொத்துவில் மக்கள் இலகுவில் இவ்விடயங்களை மறந்து விட முடியாது. மேலும், பொத்துவில் மக்கள் இனியும் பிரிந்து விடாது மர நிழலில் ஒற்றுமையோடு பயணிப்பது புத்திசாலித்தனமும் கட்டாயமும் என்பதோடு, ஏனைய பிரதேசங்களுக்கு எடுத்துக்காட்டாக கட்சிக்கும், தலைமைக்கும் நன்றியுணர்வோடு திகழ வேண்டுமென்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.
(எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA).)