ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற பயணிகள் 26 பேர் பலியானார்கள். இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்த ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற பயங்கரவாத அமைப்புக்கு உள்ள தொடர்பு தெரிய வந்தது.இதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது. 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதலை நடத்தியது.இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது இந்தியாவின் நோக்கமல்ல என மத்திய அரசு கூறியது. பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்தது.ஆனால், அமெரிக்காவின் தலையீட்டாலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நடைபெறாமல் முடிவுக்கு வந்தது என அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தையின் முடிவாகவே போர் நிறுத்தம் ஏற்பட்டது என இந்தியா கூறியது. 3-ம் நாட்டின் தலையீடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் மத்திய அரசு கூறி வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் கூறும்போது, உலக அரங்கில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் என்னென்ன விசயங்களை செய்துள்ளார் என பாருங்கள்.
இந்தியா-பாகிஸ்தான் போரை போல் பல போர்களை நிறுத்தியவர் அவர். ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரை நிறுத்த தீவிரத்துடன் அவர் பணியாற்றி வருகிறார் என கூறியுள்ளார்.ஈரான் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் டிரம்பின் நடவடிக்கைகளையும் அவர் சுட்டி காட்டி பேசினார். ஈரானின் அணு ஆலைகளை முற்றிலும் தகர்த்துள்ளார். இஸ்ரேல் மற்றும் காசா இடையே போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். பணய கைதிகள் அனைவரையும் விடுவிப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார் என கூறியுள்ளார்.இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தினேன் என டிரம்ப் தொடர்ந்து கூறி சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட்டும் இதனை கூற தொடங்கியுள்ளார்.