எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.
திரும்பத்திரும்ப எல்லை நிர்ணய ஆணைக்குழுக்களை நியமிப்பதன் மூலம் காணிப்பிரச்சினையை இழுத்தடிக்கு செயற்பாட்டிற்கு உடன்பட முடியாது. அது மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறும் விக்கிரமாதித்தன் கதையை நினைவூட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் சபை ஒத்திவைப்பு வேளையில் கொண்டு வரப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணி மற்றும் எல்லைப்பிரச்சினை தொடர்பான பிரேரணையை ஆதரித்து பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரையை வழிமொழிகின்றேன்.அதேவேளை, இன்று அமைச்சரவையில் புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவை நியமிப்பதாக தீர்மானம் எட்டப்பட்டிருப்பதான அறிவிப்பை அமைச்சர் வெளியிடவுள்ளதாக அறிகின்றேன்.புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழு என்பது மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுவது மாதிரியான செயற்பாடு என்பதுடன், திரும்பத்திரும்ப எல்லை நிர்ணய ஆணைக்குழுக்களை நியமிப்பதன் மூலம் இவ்விவகாரத்தை அரசு இழுத்தடிக்க முயல்கின்றது. இது தான் அரசின் நிலைப்பாடென்றால், இதற்கு உடன்பட முடியாதென்பதை கூறிக்கொள்கின்றேன்.
அன்ரூ சில்வா, நாணயக்கார, பனம்பலன எனப்பல ஆணைக்குழுக்கள் அன்றிலிருந்து இன்று வரை நியமிக்கப்பட்டுள்ளன. இதுதான் அரசாங்கத்தினூடைய நிலைப்பாடா? ஏனென்றால் இதில் மிகத் தெளிவாக நாங்கள் எல்லோரும் காணுகின்ற ஒரு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.வர்த்தமானியில் பிரசுரிக்கப்படாத சில கிராம சேவகர் பிரிவுகளை ஒரு பிரதேச செயலகத்திற்கு ஒரு முறையிலும், மற்ற பிரதேச செயலகத்திற்கு இன்னுமொரு முறையிலும் நிர்வகிப்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவட்ட அதிகாரிகள் அனுமதித்திருக்கிறார்கள் என்பது மிக மோசமான அநீதியாகும். இதன் பின்னணியில் தான் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளாஹ் இ0பிரேரணையைக் கொண்டு வந்திருக்கிறார்.
இது போன்றதொரு சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை 30.11.2021ம் ஆண்டு கடந்த அரசாங்க காலத்திலும் முன்னாள் முதலமைச்சராக இருந்த ஹாபிஸ் நஸீர் அஹமட் கொண்டு வந்த போது, இதே விவகாரத்தை நான் பாராளுமன்றத்தில் பேசியுள்ளேன்.எனவே, இவவாறான குளறுபடிகளை அடிக்கடி ஆணைக்குழுக்களை நியமிப்பதன் மூலம் தொடர்ந்தும் இழுத்தடிப்புச்செய்யாமல் உண்மையில் செய்யப்பட வேண்டிய விடயங்களை மேற்கொள்ள வேண்டும்.கிராம சேவகர் பிரிவு எல்லைகளை இன விகிதாசார அடிப்படையில் அல்லாமல் நிலப்பரப்பை அடிப்படையாகக்கொண்டு, மக்கள் தொகைக்கேற்ப மேற்கொள்ள வேண்டும்.மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலகப்பிரிவில் 31,565 பேரும், கோறளைப்பற்று வடக்கு, வாகரையில் 27,681 பேரும், கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனையில் 35,126 பேரும், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடியில் 28,360 பேருமாக இருக்கின்ற நிலையில், கோறளைப்பற்று தெற்கு, கிரான் 620 சதுர கீமீ, கோறளைப்பற்று வடக்கு, வாகரை 589 சதுர கீமீ இருக்கத்தக்கதாக, கோறளைப்பற்று மத்தி, மேற்கு என்ற இரண்டு பிரதேசங்களும் வெறும் 8 சதுர கீமீ, 31 சதுர கிமீ இருக்கிறது. இது எந்த அடிப்படையில் நியாயமாக முடியும். இந்த அநியாயத்திற்குத்தான் மக்கள் நீதி கோரி நிற்கின்றனர். ஏனென்றால், இதில் மிகத்தெளிவான நாம் எல்லோரும் கண் முன்னே காண்கின்ற அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.கடந்த காலங்களில் ஆணைக்குழுக்களின் முன்மொழிவுகள் சரிவர நடைமுறைக்கு வருவதற்கு நிருவாகங்கள் தடையாக இருக்கின்ற அதேநேரம், அரசாங்கங்களும் இது பற்றி பாரமுகமாக இருப்பதும் தொடர்ந்தும் இழுத்தடிக்கின்ற விவகாரம் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறும் விக்கிரமாதித்தன் கதையாகவுள்ளதையிட்டு என்னுடைய பலத்த எதிர்ப்பைத் தெரிவிக்கிறேன் எனத்தெரிவித்தார்.