Thursday, August 14, 2025
Homeஇலங்கைமன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் திட்டத்தை ஒருமாதகாலத்திற்கு இடைநிறுத்திவைப்பதுடன், அதற்குள் குறித்த காற்றாலைத் திட்டம்தொடர்பாக உரிய தரப்பினர் மன்னார் மக்களின் அபிப்பிராயங்களை பெறுவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.மன்னாரில் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடன் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழுவர் மற்றும் மன்னார் பிரஜைகள் குழுப் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர் புதன்கிழமை (13) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடலொன்றை நாடாத்தியிருந்தனர்.இக்கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.மேலும் இக்கலந்துரையாடல் தொடர்பில் தெரியவருகையில்,

மன்னார் தீவில், மக்கள் குடியிருப்புக்கள் உள்ள பகுதிக்குள் இத்தகைய காற்றாலைத் திட்டங்கள் தேவையில்லை என இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும், மன்னார் பிரஜைகள்குழுப் பிரதிநிதிகளாலும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.அத்தோடு மன்னாரில் காற்றாலை அமைக்கும் திட்டத்திற்கு மன்னார் மக்கள் எதிரானவர்களில்லையெனவும், மன்னார்த் தீவிற்குள் குடியிருப்புக்கள் உள்ள பகுதிக்குள் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்கள் அமைக்கும் செயற்பாட்டையே மன்னார் மக்கள் எதிர்ப்பதாகவும் ஜனாதிபதியிடம் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்தகால இனவாத அரசாங்கங்கள் இத்தகைய காற்றாலை மின்உற்பத்திக் கோபுரங்களை அமைப்பதற்கான அமைச்சரவை அனுமதிகளை வழங்கியுள்ளபோதும், கற்றாலை அமைப்பதுதொடர்பில் மக்களின் கருத்துக்கள், ஆலோசனைகள் கேட்டறியப்படவில்லை எனவும் இதன்போது ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டதுடன், காற்றாலைத் திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்துவதுடன், இவ்விடயத்தில் மன்னார் மக்களின் அபிப்பிராயங்களும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது.

மேலும் இதன்போது மன்னார் காற்றாலைத்திட்டத்தால் ஏற்படும் சிக்கல் மற்றும் பாதிப்பு நிலைமைகள் தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கப்பட்டள்ளது.இந்நிலையில் குறித்த காற்றாலைத் திட்டத்தை ஒருமாதகாலத்திற்கு இடைநிறுத்தி, மக்களின் அபிப்பிராயங்களைப் பெறுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.மேலும் இச்சந்திப்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், ரிஷாட் பதியுதீன், உபாலி சமரசிங்க, மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன், மன்னார் பிரஜைகள் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:  வவுனியா நகரில் ஞாயிற்று கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்கள் நடத்துவதற்கு தடை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!