யாழ்ப்பாணம் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் – இரண்டாவது குருமகா சந்நிதானம் – ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்றிரவு முருகனடி சேர்ந்தார்.கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே நேற்றிரவு தேகவியோகமானார்.அவரது இறுதிக்கிரியைகள் இன்று மாலை நடைபெறவுள்ளன. சுகவீனம் காரணமாக ஓரிரு தினங்களுக்கு முன்னர் கொழும்பு சென்றிருந்த அவர் கொழும்பில் வெள்ளவத்தையில் கம்பன் கோட்டத்தில் தங்கியிருந்து தனியார் வைத்தியசாலையில் உடற்பரிசோதனைகளுக்காகச் சென்றிருந்தார்.இந்நிலையில் பரிசோதனை முடிவுகளுடன் தனியார் வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட இருந்த நிலையில், நேற்று இரவு திடீரென காலமானார்.இந்நிலையில் தமக்கு ஏதும் நேர்ந்தால் தம்மைச் சமாதி வைக்க வேண்டாம் என்றும், காலதாமதமின்றிச் செம்மணி மயானத்தில் தம் பூதவுடலை சைவ முறைப்படி நீறாக்கும்படியும் அவர் கலாநிதி ஆறு. திருமுருகன் மற்றும் ரிஷி தொண்டு நாதன் சுவாமிகள் போன்றோருக்கு எழுத்தில் முற்கூட்டியே கூறியிருந்ததாக தெரியவருகின்றது. குரு முதல்வரின் புகழுடல் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்படும் நிலையில் இன்று மாலை 4 மணியளவில் சுவாமிகளின் இறுதி கிரியைகள் நடைபெறவுள்ளது.அரை நூற்றாண்டு காலம் ஈழத்து சைவ சமயத்தின் தலைமகனாக விளங்கிய தம் வாழ்வை மிக இளமை காலத்திலிருந்து சைவத்திற்கு தந்த ஆதீன சுவாமிகளுடைய இறுதி கிரியைகளில் சைவ உலக மக்களை திரண்டு பங்கேற்குமாறு சைவ மகா சபை அழைப்பு விடுத்துள்ளது.