ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் படையெடுத்தது. தொடக்கத்தில் இருநாட்டு எல்லையில் உள்ள உக்ரைன் பகுதிகளை ரஷியா கைப்பற்றியது. பின்னர் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உதவியுடன் ரஷியாவுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்தது.இதனால் 3 வருடங்களை தாண்டி இரு நாடுகளுக்கும் இடையில் போர் நடைபெற்று வருகிறது. சண்டை நிறுத்த பல்வேறு தரப்பில் இருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் உக்ரைன், ரஷியா பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ளவில்லை.டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபரமாக கடந்த ஜனவரி மாதம் பதவி ஏற்றார். அப்போது உக்ரைன்- ரஷியா இடையே அமைதி ஏற்பட முயற்சி மேற்கொள்வேன் எனத் தெரிவித்தார்.அதன்படி உக்ரைன் மற்றும் ரஷியாவுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியது அமெரிக்கா. 30 நாள் போர் நிறுத்தத்திற்கான பரிந்துரையை அமெரிக்கா முன் வைத்துள்ளது.இந்த நிலையில் உக்ரைன் மற்றும் ரஷியா அதிகாரிகள் இன்று துருக்கியின் இஸ்தான்புல் நகரில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 3 வருடத்திற்குப் பிறகு இரு நாட்டு பிரதிநிதிகளும் நேருக்குநேர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பேச்சுவார்தை முடிவில் போர் நிறுத்த ஏற்பட வாய்ப்புள்ளது. ரஷியா 30 நாள் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்து உக்ரைனில் இருந்து கடத்தப்பட்ட குழந்தைகளை திருப்பி அனுப்புவதுடன், போரின் போது பிடிக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய முன்வந்தால் அமைதி ஏற்பட வாய்ப்புள்ளது என உக்ரைன் கருதுகிறது.அதேவேளையில் எல்லையில் படைகளை குவிக்கக் கூடாது, மேற்கத்திய நாடுகளிடம் இருந்து ஆயுதங்களை வாங்கி குவிப்பதை உக்ரைன் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ரஷியா முன் வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.உக்ரைனும் அதன் நட்பு நாடுகளும் புதின் இதற்குத் தடையாக இருப்பதாகக் குற்றம்சாட்டுகின்றன, மேலும் அவர் அமைதியை விரும்புவதில் தீவிரம் காட்டவில்லை என்றும் கூறுகின்றன.