Home » வவுனிக்குளத்தில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட இளைஞரின் மரணத்துக்கு நீதி கோரி முல்லைத்தீவில் மக்கள் போராட்டம்

வவுனிக்குளத்தில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட இளைஞரின் மரணத்துக்கு நீதி கோரி முல்லைத்தீவில் மக்கள் போராட்டம்

by newsteam
0 comments
வவுனிக்குளத்தில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட இளைஞரின் மரணத்துக்கு நீதி கோரி முல்லைத்தீவில் மக்கள் போராட்டம்

முல்லைத்தீவு நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வவுனிக்குளத்திலிருந்து கடந்த ஆண்டு சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் கொலைக்கு நீதி கோரி இன்று (14) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
வெளிநாடு செல்வதற்கான பயன ஏற்பாடுகளைச் செய்த 27 வயதுடைய மல்லாவியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 29-07-2024 அன்று முல்லைத்தீவு நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வவுனிக்குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் கொலை செய்யப்பட்டு குளத்துக்குள் போடப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்தபோதும் அதனுடன் தொடர்புபட்ட கொலையாளிகளை இதுவரை கைது செய்யவில்லை என தெரிவித்து இன்றைய தினம் பிரதேச பொது அமைப்புகள், வர்த்தக சங்கம், பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மல்லாவி பேருந்து நிலையத்திலிருந்து மல்லாவி பொலிஸ் நிலையம் வரை சென்ற போராட்டக்காரர்கள் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக ஒன்றுகூடி பொலிஸாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.இதனையடுத்து, அங்கு அமைதியின்மை ஏற்பட்டதுடன் சம்பவ இடத்துக்கு மாங்குளம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார். அத்துடன் இளைஞரின் மரணம் தொடர்பாக விசாரணைகளை தொடர்ந்து நடத்துவதாகவும் இந்த விசாரணைகளுக்காக விசேட குழு ஒன்றை நியமிப்பதாகவும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்ததையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் கையளித்தனர்.பின்னர், சம்பந்தப்பட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கொலை செய்யப்பட்ட இளைஞரின் பெற்றோர், உறவினர்களுடன் கலந்துரையாடினர். இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் வகையில் மல்லாவி பொலிஸாரால் நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!