வவுனியா வைத்தியசாலையின் பிண அறையின் குளிரூட்டி கடந்த இரு வாரங்களாக பழுதடைந்துள்ள நிலையில் அதனை சீரமைப்பதில் வைத்தியசாலை நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
குளிரூட்டி இயங்காமையினால் வவுனியாவில் உயிரிழப்பவர்களின் சடலங்கள் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலைக்கு தொடர்ச்சியாக அனுப்பப்பட்டு வருகின்றது. இதனால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.அதனை திருத்துவதற்கான முயற்சிகள் வைத்தியசாலை நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்ற போதும் அது வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா வைத்தியசாலையில் இருந்து சொந்த செலவில் வாகனத்தை வாடகைக்கு அமர்த்தியே செட்டிகுளம் வைத்தியசாலைக்கு இறந்தவர்களின் உறவினர்கள் சடலங்களை கொண்டு செல்ல வேண்டியுள்ளதுடன், மீண்டும் சொந்த செலவில் அங்கிருந்து பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வரவேண்டியுள்ளது.இது தொடர்பில் வவுனியா வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் வைத்தியாசாலை நலக்புரி சங்கம் என்பன கவனம் செலுத்தவில்லை என பொது மக்களால் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.இதன்காரணமாக இறந்தவர்களின் உடலங்களை பெற்றுக் கொள்வதில காலதாமதம் ஏற்படுவதாகவும், பலரும் சடலங்களை கொண்டு செல்வதற்கு வாகனங்களை வாடகைக்கு அமர்துவதற்குரிய பொருளாதார நிலமை இன்மையால் அவதிப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.