இலங்கை தமிழீழ விடுதலை புலிகளிடம் பயிற்சி பெற்ற பசவராஜு திறமை மிக்க வலிமையான தலைவராக விளங்கினார். அவருடைய கூர்மையான திட்டமிடல், தாக்கும் திறன் மற்றும் பயிற்சி அளித்து படைகளை மேம்படுத்தியது மாவோயிஸ்டு அமைப்புக்கு பெரும் வலிமையாக இருந்தது.பசவராஜை குறிவைத்த பாதுகாப்பு படையினர் அவரை கடந்த 6 மாதங்களாக திட்டமிட்டு பிடிக்க முடிவு செய்தனர். முதற்கட்டமாக பசவராஜு அமைப்பில் நெருங்கிய தொடர்புடையவர்களை பாதுகாப்புப்படையினர் தீவிரமாக கண்காணித்தனர்.பாதுகாப்பு படையினரின் அதிரடி வேட்டை காரணமாக தெலுங்கானா சத்தீஸ்கர் எல்லையில் உள்ள மலை காடுகளில் மாவோயிஸ்டுகள் தஞ்சமடைந்தனர். மேலும் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்களும் அதிகரித்தன. இதனால் பசவராஜுன் பாதுகாப்பு பிரிவில் இருந்த ஒரு முக்கிய தளபதி உட்பட 6 பேர் சரணடைந்தனர். இது பாதுகாப்பு படையினருக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது.
மாவோயிஸ்டுகள் நடமாட்டம் பசவராஜு அடுத்த கட்டமாக எங்கு செல்வார். எப்படிப்பட்ட இடங்களில் மறைந்து இருப்பார்கள் என்பது போன்ற தகவல்களை அவர்களிடம் இருந்து பாதுகாப்பு படையினர் பெற்றுக்கொண்டனர்.ஜனவரி மாதம் ஒரே இடத்தில் 60 மாவோயிஸ்டுகள் தங்கி இருந்தனர். பாதுகாப்பு படை நெருங்குவதை தொடர்ந்து அவர்கள் குழுக்களாக பிரிந்து செல்ல வேண்டும் என பசவராஜு உத்தரவிட்டுள்ளார்.அப்போது சில மூத்த உறுப்பினர்கள் பசவராஜை பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அவர் தனக்காக கவலைப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
சரணடைந்த மாவோயிஸ்டுகள் மூலம் பல்வேறு தகவல்களை பெற்றுக்கொண்ட பாதுகாப்பு படையினர் துல்லிய தாக்குதல் நடத்தி பசவராஜு உள்ளிட்ட 27 மாவோயிஸ்டு களை என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொன்றனர்.
மேலும் பசவராஜு உள்ளிட்ட 7 பேர் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கவில்லை. போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் உடல்களை அடக்கம் செய்தனர்.இன்னும் 3 ஆண்டுகள் வரை பசவராஜு தலைமை பொறுப்பு வகிக்க இருந்தார். சரணடைந்த அவருடைய அமைப்பைச் சேர்ந்தவர்கள் துரோகம் செய்து காட்டிக் கொடுத்ததால் தான் அவர் எளிதில் வீழ்த்தப்பட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.இதுகுறித்து பசவராஜுன் பாதுகாவலராக இருந்த பாபு கவுசி என்பவர் கூறுகையில்:-
காடுகளில் தற்போது போதிய பாதுகாப்பு இல்லை. மேலும் பாதுகாப்பு படையினர் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் நான் எனது மனைவியுடன் சரணடைந்து விட்டேன்.பசவராஜு சரணடைந்திருந்தால், அவர் உயிருடன் இருந்திருப்பார். நாம் முன்பே புரிந்து கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.மாவோயிஸ்டு இயக்கத்தில் இருப்பவர்கள் தங்கள் குடும்பங்களுக்காக, தங்கள் சொந்த எதிர்காலத்திற்காக வெளியே வருமாறு நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்றார்.பசவராஜை உயிரோடு பிடித்த பிறகு சுட்டுக்கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.